மீண்டும் ஒரு விடுதலை!

கவிஞர் கு.மா.பா.திருநாவுக்கரசு
 


தங்களைக் கடந்து
மனித நேயத்தை
விதைத்த மகான் நீ!
மதம் பிடித்தவர்கள் - உன்னை
மதத்தின் பெயரால்
வதம் செய்ததுடன்,
மதத்தையே அரசியல்
கவசமாய் மாற்றி - தேர்தல்
களம் புகுந்தார்கள்! - தொழும்
தலம் உடைத்தார்கள்!

அகிம்சையும் நோன்பும்
ஆயுதங்களாக்கிப்
போராடி வென்றவன் நீ! - நின்
சொல் இலக்கணத்திற்கும்
மத நல்லிணக்கத்திற்கும்
கட்டுண்ட தேச மக்கள்,
கத்திகள் ஏந்தாமல்
இரத்தமும் சிந்தாமல்
விடுதலைப் போரில்
வெற்றி கண்ட மண்ணில்,
கத்தியும் கடப்பாரையும்
காட்டுமிராண்டித்தனமும்,
அத்துமீறும் அவலங்களுக்கா...
அடிமைத் தளையொடித்தாய்?

சாதீய ஆணவக் கொலைகள்!
நீதியும் நியாயமும் மாய,
வீதியில் வெட்டுக்குத்து!
வேதனைத் தொடருகின்றார்!
பெண்களின் தற்காப்பிற்கு
பல், நகம் நினைவுகூர்ந்தாய்!
வன்புணர்வால் வெறியரோ
வயதையும் பொருட்படுத்தாமல்
சின்னஞ் சிறாரின் கற்பை - சிலர்
சேர்ந்தே அழிக்கின்றார்!

மதுவினில் வருவாய்த் தேடி
மக்களைப் போதையில் ஆழ்த்தி,
அரசுகள் கொள்ளையடிக்க - சிலர்
அரசியல் நடத்துகின்றார்!
வாய்மையைப் பூசிக்கொண்டு
வாக்கினை விலைபேசித் தான்,
'வறுமையை ஒழிப்போம்' என்றே
பெருமையாய் அறிவிக்கின்றார்!

"வெள்ளையனே வெளியேறு!" என்று
விடுதலை அடைந்த நாட்டில்,
கொள்ளையர் வளர்வதற்கன்றோ
கொள்கைகள் வரைந்து வைத்தார்!
சுதேசி பொதுத்துறை வங்கியில்
சுருட்டியக் கோடிகள் ஏய்த்து,
அந்நியர் நாட்டில் இன்று
அடைக்கலம் புகுந்து கொள்ள,
தன்னலத் தனியார் சிலரைத்
தப்பவும் விட்டு விட்டார்!

மகாத்மாவே...
சொந்த நாட்டிலேயே
சுதந்திரத்தை தொலைத்துவிட்டு,
இலவசங்களுக்குக் கையேந்தும்
எங்கள் தேச மக்கள்,
எந்திரிக்க முடியாமல் சிக்கிக்கொண்ட
இந்த இரும்புத் தளைகளை நீக்க,
மீண்டு... எழுந்து வா!
மீண்டும் ஒரு விடுதலைப்போர் நிகழ்த்த!

 



 


 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்