அறிவெனும் கடிவாளம்

வேதா. இலங்காதிலகம், ஓகுஸ், டென்மார்க்.

பருந்தொன்று அன்னமாக மாற நினைத்தால்
அருமையாய் அன்ன நடை நடக்க வேண்டும்,
ஒரு வளைவான கழுத்துடை அலகு வேண்டும்.
மரங்கொத்தி கிளியாக மாற நினைத்தால்
வரமான நிறமும் கிளிச்சொண்டும் வேண்டும்.
குடிசைவீடு கோபுரமாக மாற எண்ணினால்
கொள்ளைப் பணத்தோடொரு காணியும் வேண்டும்.
சிறுநரியொன்று சிங்கமாக எண்ணம் கொண்டால்
சிலிர்க்கின்ற சடை முகத்திற்கெங்கெ போகும்!
கூரிய கடைவாய்ப் பல்லிற்கென்ன செய்யும்!
சினக்கின்ற உறுமலை எங்கே கற்கும்!
அசடுவழிய அரங்கமேறி நின்று கொண்டால்
திருடனுக்கு இராசபார்வை வந்திடாது.
தனக்கெது தான் முடியுமென்று தானறிபவன்
தகுதியற்று முழப்பாரம் சுமப்புது வீண்.
யானையுடன் பூனை சமம் என்றாகாது.
யார்யாருக்கு எதுவென்பது எழுதாத கோடு.
பேராசை பெரும் தரித்திரம் என்பதாக
பேதமையின்றி மொழிந்தனர் அனுபவசாலிகள்.
பேதலிக்கும் மனதிற்குக் கடிவாளம் இட்டு
பேர்பெற்று வாழ்ந்து பெருமை பெறலாம்.
மனமென்னும் சக்கரம் எத்திசையும் சுற்றும்.
அறிவெனும் கடிவாளம் சுழற்சியின் சுக்கான்.



vetha@stofanet.dk