வலிக்கின்ற மரணங்கள்

முல்லைஅமுதன

வண்ணத்துப் பூச்சி குரலெடுத்து-
ஓலமிட்டது....
என் இறக்கைகள் அறுபட்டு
தும்பியாவேனோ எனும் அச்சத்தில்-
தேர்தலாய் விடிகிறது!

முள்ளிவாய்க்கால் அவலம் உணர
பாராளுமன்ற சதுக்கத்தில்
பின்னர்-
தெருவில் இறங்கினோம்...
மரணங்கள் வலித்தன...!

பூகோளப்பந்தின் அதிபதி
விழித்திருக்கும் போது கூட
தூங்குபவர் போல் இருப்பவரிடம்
நெற்றிக் கண்ணை திறப்பார்
ஏன எதிப்பார்க்க முடியாது..!
இது எரிகோள்களின் காலம் !
உடல்கள் பிணமாய் எரிகின்ற காலம்..!!

விரல் இடுக்கைகளில் இடப்படும்
மை அனைத்துமே
எம் மக்களின் குருதி
எனும் உண்மை எனியாகிலும் உணர்வோமாக

இன்று
தங்கை தொடர்பில் வந்தாள்
அங்கு கொலை,
இங்கு கடத்தல்
அம்மம்மா அடித்துக் கொலை, களவு
அண்ணல் பற்றி சனத்திடையே உணரப்படுகிறதாம்....

பிணக் குவியல்களிடையே
நடந்து வந்த
என் மகன் முன்னே-
புத்தனின் தலையுடன்
இன்றைய அரசன்!
நிராயுதபானிகளாய் நாங்கள்!
மௌனித்த மானுடத்தின்
மூச்சுக்காற்று எங்கள் பூமியில்
கந்தகம் சுமந்து புற்களாய்
நிமிர்ந்து நிற்கின்றன....
மிதியாதீர் என தோழி
சொல்லிப் போனாள்
அசரீரியாய்....

எல்லாம் முடிந்தது என
விமானம் ஏறலாம்....
பியர் குடிக்கலாம்...
அதற்குமுன் எமக்கான
வலி நிவாரணி குடிக்கலாம்....
ஈழமாக....!!!


mullaiamuthan_03@hotmail.co.uk