செல்லக்குழந்தையாகியே.....!

எஸ். பாயிஸா அலி,கிண்ணியா

பரபரத்தலையும் இயந்திரக் கணங்களுள்ளே
அன்பெனும் பொன்விதை
பிதுக்கி வீசப்பட்ட சூனியப் பூமிகூட
ஒரு வெங்காயந்தான்.
உரிக்க உரிக்க ஒன்றுமேயில்லாத
இவ்வழுகிய வெங்காயத்திலே
உள்ளீடுகள் செறிந்த உச்சத்து சூரியனாய்....
அதன் ஒற்றைக் கதிருள்ளே ஒளிந்திருக்கும்
ஒராயிரம் நிறச்சரிகைத் துகள்களாய்......
பூத்திருக்கும் விலாஎன்புதனைப்
போர்த்திருக்கும் பனியாடையாய்.....
விரிந்த தன் அகண்ட இறக்கைக்குள்ளே
அரவணைத்திருக்கும் தாய்ப்பறவையாய்.....
இன்னமும் எழுதப்படாத ஆகச்சிறந்த கவிதைகளின்
திறக்கப்படாத அழகுப் படிமங்களாய்......
உள்ளுக்குள்ளே உறைந்து நிறைந்து கிடக்கிறாயே
முழுதுமாய் பூவாகிக் கண் சிமிட்டுமோர்
மல்லிகைக் கந்தாகியே
உன் ஈரப்பூக்களை அள்ளிச் சொரிந்தபடி.
என் திசை பார்த்துச் சொரிந்த
ஒற்றைப்பூவைக்கூட நழுவ விடாத நிதானங்களோடு
சேகரஞ் செய்தனைத்தையுமே
உயிரின் மடல்களுக்குள் நாருரிந்தே
நான் கோர்த்த மாலைக்காகவே
என்னளவுக்கும் குறுகிக் குள்ளமாகியே
சூடிக்கொள்ளத் தலை சரிக்கிறாயோ
நம் செல்லக்குழந்தையாகியே.


sfmali@kinniyans.net