தோற்கும் மனிதம்

வேதா. இலங்காதிலகம், ஓகுஸ், டென்மார்க்.

மயிலின் அழகை,  நடனத்தை,
மழலை அழகை, வளர்ச்சியை,
மலர் அழகை, மாலையாகுதலை
மதுரமணத்தை மனிதன் ரசிக்கிறான்.
விண்ணில் வியத்தகு நட்சத்திரம்,
மண்ணிற்கு உயிரீயும் சூரியன்,
கண்ணிற்குக் கோலமிடும் நிலாவென,
என்னமாய் ரசிக்கிறார் உலகினர்!

பிறந்த இயற்கை உணர்வால்
நிறக்கும் திறன், நிகழ்வுகளை
இறக்காத ரசனை உணர்வால்
சிறந்த மனிதன் ரசிக்கிறான்.
இயற்கையை, அஃறிணையை ரசிக்கும்
இவன், இனத்தின் மகிழ்வை, உயர்வை,
இனிதாய் உள்வாங்கும் இயல்பை
இழந்து தவித்துப் பொருமுகிறான்.

சிறந்த மானுடச் செயற்றிறனைத்
திறந்த உள்ளமாய்ப் போற்றிட,
மறந்திடாதொருவனை வாழ்த்திட,
புறந்தள்ளுகிறான் நல் மனதை.
வலையிடும் சுயநலச் சுழியுள்
அலைந்து சிக்கும் மனிதனால்
விலையில்லா மனிதம் நழுவுகிறதே!
ஐயகோ மனிதமிங்கு தோற்கிறதே!
vetha@stofanet.dk