மேதினம் விடுமுறைக்கான நாளல்ல தோழர்களே!!

வித்யாசாகர்


நாளெல்லாம் வெய்யிலில்
ஐஸ்வண்டி தள்ளுபவனுக்கோ,

தெருவோரம் அமர்ந்து உச்சி பிளந்து
ஒரு கத்தை கீரை வாங்கக் கூவி கூவி விற்கும்
வயதான தள்ளாத கிழவிக்கோ,

பத்துபாத்திரம் தேய்த்து தேய்த்து
கையில் ரேகை மறைந்து போன
என் குடிசை வீட்டு சகோதரிக்கோ,

ஊரெல்லாம் சுற்றி கால் வீங்கிய
காய்கறி காரனுக்கோ..

கையெல்லாம் காரத்தால் வெந்துபோன
சுண்ணாம்பு அடிப்பவனுக்கோ..

மீன் விற்பவனுக்கோ
மூளை தெரு பெட்டிக் கடை
அண்ணாச்சிக்கோ -
காலையில் பேப்பர் போடும் சிறுவனிலிருந்து
மாலையில் நடந்து
பால் கொண்டு வரும் தாத்தா முதல்
மேதினக் கொண்டாட்டம் இருக்குமெனில்

தெருவெல்லாம் பெருக்கி
நச்சு கால்வாயில் தூர் வாரும்
தொழிலாளிக்கு ஓர்தினம்
வாழ்வு மலருமெனில் -

நம் வாழ்வின் முன்னேற்றத்தால்
அவர்களின் நிலையை சற்று மாற்ற முடியுமெனில்
ஏழைகளின் சுமையை குறைக்க
நீயும் நானும் காரனமாவோமெனில் அன்று
உனக்கு நீயும் -
எனக்கு நானும்
மேதின வாழ்த்து சொல்வோம்;

அதுவரை இதை ஒரு
அதிகாரம் எதிர்க்கக் குறித்த
போராட்ட நாளென்றே கொள்வோம்!vidhyasagar1976@gmail.com