தர்மத்தாய் பிள்ளைகளே சத்தியம் காரீரோ!

வேலணையூர் பொன்னண்ணா, டென்மார்க்


கோபுரம் எரிஞ்சு போச்சு
கொடிமரம் முறிஞ்சு போச்சு
குந்தியிருந்த பள்ளி மண்டபமும்
தரை மட்டம் ஆகிப்போச்சு
கோயில் மணியோசை கேட்ட தூரமெல்லாம்
அகதிமக்கள் குரலோசை கேட்கும் நிலையாச்சு..!உலக
தர்மத்தாய் பிள்ளைகளே சத்தியம் காரீரோ..!?

குமுறும் வானமே..! கொந்தழிக்கும் கடலே..!
எரியும் தீயே..! எழுந்தடிக்கும் புயலே..!
அன்னைத் தமிழ்காக்க தமிழர் உயிர்காக்க
காந்திதேசமும்; முகத்திரை கிழித்தாச்சு
கொடுமைக்கு உதவியாக் கொடும்பழிசுமந்தாச்சு.! உலக
தர்மத்தாய் பிள்ளைகளே..! சத்தியம் காரீரோ..!?

சொந்தமக்கள் தலைமீது குண்டுகளைத்தான் கொட்டி
குண்டடித்த காயத்துக்கு மருந்துக்கு தடைபோட்டு
தாயைப் பிள்ளையை, தாரத்தை தான் பிரித்து
முள்ளுகம்பிக்குள் வைத்து தமிழினமழிக்கும்...சிங்களத்தின்
நாடாளும் புத்தனின் பேயாட்சி செயல்கண்டும்
அகிலம் கண்மூடி வாய்பொத்தி நிற்கிறதே..! உலக
தர்மத்தாய் பிள்ளைகளே சத்தியம் காரீரோ..!?

உயர்திணைகள் கூடிப்பேசி அஃறிணைகள் வேலையாய்
உயிர்வதைத்து பிணம்புணரும் பேய்கள் செய்வதெலாம்
தர்மமென்று தானுலகம் தானினைத்துக் கொண்டதுவோ..!?
பாலகரை, மானிடரை பசிக்கவைத்து கொல்லுவது
வீரமென்று கொள்ளுதா..!? வீட்டோவால் நீதிகொல்லும்
செங்குருதி கொடிதாங்கி அரசாளும் நாடுகளே..!
நீதிக்கு தலைவணங்கி நின்மதியைத் தாரீரோ..!
தர்மத்தாய் பிள்ளைகளே சத்தியம்காரீரோ..!

 

ponnanna70@gmail.com