நேரம்

வேதா. இலங்காதிலகம், ஓகுஸ், டென்மார்க்.

தாளலய சங்கமம் காலப்பிரமாண அங்கம்.
மாத்திரை விலக இசை யாத்திரை பாழாகும்.
நேரமெனப் படுவது சாரமிகு நிறைகோல்.
தூரம் தள்ளப்படுவது பாரமிகு சிலுவைகள்.

நேரப் பிரமாணம் வாழ்வின் முத்தாரம்.
நேர மதிப்பு வாழ்வின் வித்தாரம்.
விநாடிகள், நிமிடங்கள், மணித்தியாலங்கள்
சுகநாடிகள் மனித நற் கணிப்பீடுகளில்.

சனி விரதம் ஞாயிறில் வராது.
தினராத்திரி நவராத்திரியாகாது .- விலகிய
சுபநேரம் சுபகிரியைக்குத் தடை.
தன் நேரமாகினால் காலனும் விரிப்பான் கடை.

காலப் பிரமாணம் தவறிய சிசுவும்
காலன்! கர்ப்பிணித் தாயிற்கும், சிசுவிற்கும்.
நிர்ணய நேரத்தில் மின் சடப் பொருளும்
நிர்வாகம் புரியும் தன்னியங்கி நிலையில்.

ஞானம் அளக்கும் மானிடம் மட்டுமேன்
ஆலகாலவிடமாய்க் காலத்தைக் கருதுகிறான்!
ஈரமனதில் நேரம் ஓரம் நகரும்.
நேரம் தவறப் பிறர் நேரமும் நகர்த்தப்படும்.

சுயகட்டுப்பாடு நழுவிடில் நல்ல
நேரக் கட்டுப்பாடு நழுவும் - மனித
ஆசை அளவிற்கு மேவிடில்
நேரம் கட்டுப் படாது விலகும்.

வரம்பு கட்டிய ஆசை வயலுள்,
தரம் நிறை சுயகட்டுப் பாட்டினுள்,
நேரம் மனிதனுக்கு வாய்த்த வரம்!
நேரநிர்வாகம் - நன்மதிப்பு! நாகரீகம்!.vetha@stofanet.dk