கடையேழு வள்ளல்கள்

மதுரை பாபாராஜ்

நற்றமிழின் சொல்லெடுத்துக் கவிதா யாத்து
நல்லாட்சி வேந்தரவர் குணநலன்கள்
முற்றத்து நிலவொளியாய் மிளிரும் வண்ணம்
முறையாக எழுதிவைத்தார் புலவர் மக்கள்!

கொடைமடத்தில் சிறந்தவனாம் அதிய மானின்
கொடைப்புகழோ நிலைக்கின்ற வண்ணம் அவ்வை
தடையின்றி அருநெல்லிக் கனியைத் தந்தாள் !
தமிழவ்வை இங்குவாழ வேண்டும் என்றே
படையரசன் அக்கனியைத் திருப்பித் தந்தான்!
பண்பினிலே சிகரமாக உயர்ந்து நின்றான்!
மிடுக்குடனே முதற்சிலையாய் புகழைப் பெற்றான்!
மேதினியே போற்றுதடா என்றும்!என்றும்!

நெடும்படைபோல் பாணர்கள் வந்த போதும்
நெஞ்சாரக் கொடைஈந்து உயர்ந்து நின்றான்!
உடும்பொன்றின் உடல்தைத்து, அதற்குப் பின்பு
உரல்போன்ற தலையுடைய பன்றி தைத்து,
அடுத்தங்கு புள்ளிமான் ஒன்றைத் தைத்து,
அஞ்சுதற்கு அரியபெரும் புலியைத் தைத்து,
நெடுமலையை யொத்தவேழம் தன்னைச் சாய்த்து
நிமிர்ந்தவல்வில் ஓரிஎன்பான் சிலையிரண்டு!

வாட்டுகின்ற கடும்வறுமை மறையும் வண்ணம்
வாரிவாரி வழங்கிநின்றான்! பாணர், மற்றும்
பாட்டியற்றிக் களித்துநின்ற புலவர் கட்கும்
பரந்தமன அன்பிற்கும் வள்ளன் மைக்கும்
கூட்டுறவுத் தலைவனென உரைக்கும் வண்ணம்
குளிரடிக்கும் மயிலுக்கே என்றே எண்ணி
போட்டிருந்த பொன்னாடை தன்னைப் போர்த்தி
புனிதபேகன் உயர்ந்துநின்றான் சிலைமூன் றாக!
மலர்ந்தாடும் சோலைஎன்றும், மணற்பரப்பு
மலைபோலக் குவிந்திருக்கும் பாலை என்றும்
நிலந்தழுவும் மழைஇங்கே பார்ப்பதில்லை!
நெடுங்கடைக்கண் வந்துநிற்கும் பாணர் மற்றும்
புலவர்கள், விறலியர்கள் மகிழும் வண்ணம்
பொன்பொருளைப் பேதமின்றி மழையைப் போல
வளங்கொழிக்க ஈந்ததாலே வள்ள லான
மாப்புகழ்க் காரியவன் சிலையோ நான்கு!

கனிகுலுங்கும் மரம்நாடிப் புள்ளி னங்கள்
களிப்புடனே செல்லுதல்போல் மாவே ளாயின்
தனிச்சிறப்பாம் கொடைச்சிறப்பை அறிந்து வந்தோர்
தழுவிநிற்கும் வறுமையைக் களையும் வண்ணம்
கனிவுடனே பொருட்களுடன் வேழம் ஈந்து
கடையேழு வள்ளலிலே ஒருவன் ஆனான்!
கனிமனத்தோன் நீலநாகம் நல்கி நின்ற
கலிங்கத்தை உவந்தளித்தான்! சிலையோ ஐந்து!

படுந்துயரை எடுத்துரைக்கும் முன்னுணர்ந்து
படரிருளை நீக்குகின்ற கதிரைப் போல
கொடுத்திட்டான் செல்வத்தை அள்ளி அள்ளி!
கொற்றவனைச் சார்ந்திருந்த பாண ரெல்லாம்
சுடுவறுமைப் பிடியவிழ்ந்து இருந்த தாலே
தோன்றுகின்ற பொழுதுக்கு ஏற்ற வண்ணம்
தொடுக்கின்ற பண்மறந்தார்! வள்ளன்மையின்
தூயமன நள்ளியவன் சிலையோ ஆறு!

வாடிநின்ற பாணரகம் மலரும் வண்ணம்
மகிழ்ச்சியுடன் ஈந்துவந்து வாழ்ந்தி ருந்தான்!
தேடித்தான் தவழ்ந்ததம்மா கொழுகொம் பொன்றைத்
தேனமுத வெண்முல்லைக் கொடிதான் அங்கே!
நாடித்தான் தேரோடு விரைந்தானம்மா!
நளினமாக நிறுத்தியேதான் கொடியைத் தாங்கி
பாடிவீடு சமைப்பவனோ தேரின் மீது
படரவிட்டான்! பாரியவன் சிலையோ ஏழு!

கடையேழு வள்ளல்கள் போர்க்களத்தில்
கணைபட்டு வீழ்ந்துபட்ட நிலையறிந்தால்
மடைதிறந்த வெள்ளம்போல் துயரம் நெஞ்சில்
வழிந்தோடி துடிக்கவைக்கும் நிலையைப் பெற்றேன்!