தொனி

தர்மினி

சுற்றியிருக்கின்ற நான்கு வீடுகளும்
சற்றுக் கதவு திறந்து பார்த்தன
வீதியில் போனவர்களும்
வேடிக்கை பார்த்துச் சென்றனர்.

கணவன் என்னைத் திட்டிக்கொண்டிருக்கிறான்
காதடைக்க வாயடைத்து நின்றேன்
ஆற்றாமையுடன் நான் சொல்லும் சமாதானங்கள்
அவன் காதுகளிலிருந்து நழுவி காலடிகளில் மிதிபட
என் வீட்டில் ஆதரிக்க ஆளில்லாத அகதியானேன்.

மறுநாள் மெதுவாக வந்தானவன்
என்னிரு கைகள் பிடித்து
ஒற்றைக் காதில் மட்டுமே ஒலிக்க
இன்று உரத்துக் கத்திட முடியாதவன் போல்
மெல்லச் சொன்னான்
'மன்னித்து விடு'

என் ஒரு காதுச்சவ்வும் அதிராத அவ்வசனம்

எட்டிப் பார்த்த அத்தனை வீடுகளுக்கும் எப்படிக் கேட்கும்?




tharmini@hotmail.fr