சுயம சுமையாகி...

லறீனா அப்துல் ஹக் - இலங்கை
 

என் சுயத்தில் வைத்திருந்த
அபரிமிதப் பெருமிதங்கள்
நொடியில் நொறுங்குண்டு சிதிலமாய்...
எனக்குள் நானே ஒரு கைதியாய்
சிறகிழந்து...
கனவுக்குள் ஆழ்ந்தமிழ்ந்து
மோனப் பரவசத்துள்
தொலைந்ததான நினைவுகளை..
பகிர்தலில் பாரங்கள் குறையுமென்று
நினைந்திருந்த நிம்மதியை...
அசுரக் கரங்கொண்டு தாக்கியழித்தது
யதார்த்தம்.

எனக்குள் கிளர்ந்து மேலெழும்
உணர்வுத் தகிப்புக்குள்
சாம்பல் துகளாகிவிட்டதான- ஒரு
பரிதவிப்பு.

சுற்றிச் சுழல்கின்ற பூமி
என்னை மட்டும்
விட்டுவிட்டுச் சுற்றவில்லைதான்.
ஆனால்...
எல்லோரும் அருகிருந்தும்
எவருமே அற்றதான தவிப்புக்குள்
அமிழ்ந்து போயிற்று
என் விசும்பல்.

தொட்டுவிடும் தூரத்தில்தான்
விடியல் இருப்பதான- வெறும்
பிரமைக்குள் சுயம் தொலைத்து
யுகங்களின் உருக்கொண்டு நகரும்
இன்னும் எத்தனையெத்தனை
நாட்களை நான்
நெட்டித்தள்ளிக் கொண்டிருப்பேன்?

            

lareenahaq@gmail.com