கவிஞர் முருகையனுக்கோர் இரங்கற்பா

துறையூரான்

மூத்த கவிஞர் முருகையன் மறைவு
காத்திரமான பேரிழப் பன்றோ எமக்கு
ஆழ்ந்த அறிவும் அரிய நற் பண்பும்
சூழ்ந்த புலமையும் சீரிய பார்வையும்
கொண்டே வாழ்ந்தார் கவிக் கோமானாய்;
கண்டே நாமும் களிப்புட னிருந்தோம்

ஏராளம் கவிதைகள் எழுதிக் குவித்தார்
தாரளமாய்த் தந்தார் கவிதை நாடகங்கள்
பேராளார் போற்ற புகழுடன் வாழ்ந்தே
சீராளராகச் சென்று விட்டாரே, இதனால்
ஆறாத் துயரில் ஆழ்ந்த அவர் குடும்பத்தை
தேற்றித் தேற்றி நாமும் தென்பு பெறுவோம்

அறுபத்தொன்று முதல் அவரை நானும்
அறிந்து கொண்டேன் அலுவல கத்தில்
பாடப் புத்தகம் வெளியிடும் பணியில்
கூட உழைத்தோம் கொழும்பு நகரில்
ஒரே வீட்டில் ஒன்றாய் வாழ்ந்தோம்
பாரே வியக்கப் பண்பாய் இருந்தோம்

பிறவிக் கவிஞர் முருகையன் மறைவு
மறக்க முடியாது மறுப்பேது மில்லை
அன்னார் எழுதிய அநேக ஆக்கங்கள்
அச்சேறா தடங்கிக் கிடப்பதால் அதனை
அறிந்து நாமும் அவற்றை அச்சிட
ஆவன செய்தல் அவசிய மன்றோ

எமது கவிஞர் ஈட்டிய புகழை
எங்கும் பரப்ப ஏற்றவை செய்ய
புகலிடத் தமிழர் பலபேர் சேர்ந்து
பகைமை களைந்து பணத்தைத் திரட்டி
அன்னார் ஆக்கங்கள் எல்லாஞ் சேர்த்து
அழகிய நூலாய் அச்சிட வேண்டும்




sivasinniah@yahoo.com