மழையும்.. நீயும்.. காதலும்

வித்யாசாகர்

உன் நினைவுகளை
கேட்டு வாங்கியதில்
கவிதையாக மட்டுமே
மிஞ்சியது -
உன் காதல்!
-------------

வேறோர் வீட்டின்
வாசல் கடக்கையில் கூட
நீ அங்கே நிற்கிறாய்
திரும்பி வரும் வரை கூட
காத்திருக்கிறாய் -
மனசு கனத்து
பார்வையில் -
மறைக்க மனமின்றி
கேட்டால் மட்டும்
பொய் சொல்லி போகிறாய்
காதலிக்க வில்லையென;

அதனாலென்ன
நான் நாளையில் இருந்து
உன் வீட்டுப் பக்கமே வரப் போவதில்லை.

மனது கனத்தால்
உடனே வந்து
காதலிப்பதாக கூட
சொல்ல வேண்டாம்;

சற்று என் வாசல் கடந்து போ.

உன் காலடி சப்தத்தில்
என்.. சிரிப்பு மலர்கள்
காதலாய் காதலாய் பூத்துவிடும்!!
---------------

காலையில் எழுந்து காற்றை
உள்ளிழுக்கையில் -
உள் புகுகிறாய் நீயும்,

அண்ணாந்து வானம் பார்க்கையில்
வெளிச்சமாய் பார்வையுள்
நுழைகிறாய் நீயும்,

நுகரும் முதல் வாசத்தில்
நீ என்னை கடந்த பொது
உணர்ந்த வாசம் இன்னும் விடுபடாமலே
வாசம் கொள்கிறது,

யாரோ அழைக்கையில்
திரும்பி பார்த்தும் -
உனையே தேடுகிறேன் நான்;

உணர்தல் செவியுறுதல்
எண்ணுதல் பார்த்தல் என எல்லாமுமாய்
நீயே இருக்க -

மீண்டும் மீண்டும் உனக்கான
அத்தனை எதிர்பார்ப்புகளோடும் நான்
நீ வரும் அதே தெருவின் வளைவில்
இன்றும் நிற்கிறேன். நீ வருகிறாய்..
மழை சோ...வென கொட்டுகிறது.

மழை உன்னை நனைக்காத குடையில்
நனையாமல் நீ என்னை கடக்கிறாய்..

திரும்பி என்னை பார்க்க கூட - உன்
தோழிகள் உனக்கு அவகாசம் தந்திடவில்லை..

தெருவின் கடை மூலையில்
சென்றாவது திரும்பிப் பார்ப்பாயோ என
மனசு துடிக்கிறது..

எங்கு பார்த்தாய் நீ
சிரித்து பேசி மழை ரசித்து
கூட்டமாய் கைதட்டி சென்றே விட்டாய் நீ.

படபடக்கும் இதயத்தை
நிறுத்திக் கொள்ள கூட இயலாதவனாய்
நிற்கிறேன் நான்.

மழை எனை நனைத்து
பூமியில் நிறைகிறது.

மழையையும் சேர்த்து நனைத்து
கண்ணீராய் கரைகிறதென் காதல்!
 vidhyasagar1976@gmail.com