செம்மொழி மாநாடு செய்தது என்ன ?

தமிழேந்தி                                  

செம்மொழி மாநாடு என்ன கிழித்தது
திரும்பவும் கலைஞரின் குடும்பமே செழித்தது
                                                                              (
செம்மொழி)

வெட்டியாய் முந்நூற்று எண்பது கோடியைக்
கொட்டிக் கரைத்த குடும்பத் திருவிழா
பொட்டுப் பூச்சியாய் வாழும் தமிழனை
முட்டாள் ஆக்கி முடித்த பெருவிழா
                                                                               (
செம்மொழி)

மகனொரு பக்கம் மாநாட்டைத் திறந்தார்
மகளோ தானே எல்லாமாய்ப் பறந்தார்
மனைவியர் மருமக்கள் பேத்தியர் இருந்தார்
மற்றுள்ள சொந்தங்கள் முன்வரிசை நிறைந்தார்
                                                                               (
செம்மொழி)

பாட்டால் புகழப் பாவலர் ஒருபுறம்
பல்லக்குத் தூக்கும் பேச்சாளர் மறுபுறம்
கேட்டுக் கேட்டு மு.. மனம்மிகக் குளிரும்
கேட்டநம் வயிறோ தீப்பற்றிக் கருகும்
                                                                                (
செம்மொழி)


விருந்திட்ட இடத்தைக் கூட்டம் பிய்த்தது
வெளிஆய்வு அரங்கை ஈக்கள் மொய்த்தது
இருந்த தமிழ்நிலை நெஞ்சினைத் தைத்தது
"
எழும்"இந்த இனம் என்றஎண்ணம் பொய்த்தது
                                                                                  (
செம்மொழி)

பள்ளியில் நம்தமிழ் கட்டாயமி ல்லை
அறமன்றப் படிகளைத் தமிழ்தொட்ட தில்லை
கல்வியில் உயர்நிலை தமிழ் எட்டவில்லை
கரைத்த பணத்துக்கு முழுப்பயன் இல்லை
                                                                                (
செம்மொழி)

பேருக்கு ஈழத் தமிழர்க்காய் அழுகை
பெருங்கேடன் தில்லிக்கே கைகட்டித் தொழுகை
யாருக்கும் பெருநன்மை கூட்டாத கூட்டம்
யாருடைய ஆட்சிதான் தமிழ்த்துயர் ஓட்டும்?

                                                                                (செம்மொழி)

 

arasezhilan_1964@yahoo.co.in