அத்தனையும் உன்குற்றம்....

கவிஞர் பொத்துவில் அஸ்மின்

இதழோரப் புன்னகையோ
இதயத்தைக் கைப்பற்றும்
உன்னோரப் பார்வைகளால்
உள்நெஞ்சில் தீப்பற்றும்

பார்வைகளால் பலபாடம்
பலதடவை நான்கற்றும்
உணர்வெல்லாம் உன்னோடு
உணர்விழந்து ஊர்சுற்றும்

நட்பிடத்தில் காதல்வந்து
நட்பென்று பூச்சுற்றும்
நட்பொருநாள் கர்ப்பமுற்ற
நடுக்கத்தில் தலைசுற்றும்....

காதலிக்கும் வேளையிலே
கனவினிலும் தேன்கொட்டும்
அத்தனையும் கனவானால்
அடிநெஞ்சில் தேள்கொட்டும்

மயங்கவைத்து மறைவதுவா
மல்லிகையே உன்திட்டம்
ஆசையெலாம் அரைநொடியில்
ஆயிடுமா தரைமட்டம்...?

உன்னுயிரை நீ வெறுத்தால்
உனக்கும்தான் பெறும்நஷ்டம்
ஆழ்மனதைச் சொல்லிவிட்டேன்
அதற்குப்பின் உன்னிஷ்டம்

கன்னியுனை தேடியது
கண்களது குற்றமன்று
கவிதைகளைப் பாடியது.
கவிஞனது குற்றமன்று

அழகை படைத்தளித்து
அதைரசிக்க விழிபடைத்து
ஆட்டிவைக்கும் ஆண்டவனே
அத்தனையும் உன்குற்றம்...

 

vtvasmin@gmail.com