குழந்தைகள் காணும் உலகம் புதிது; கவனம் கொள்க!!

வித்யாசாகர்

அடுப்பு எரிகிறது..
நான் வெளியே கூவிச் சென்ற
கீரைகாரரிடம் கீரை வாங்க வாசல் நோக்கி போகிறேன்
நீ அடுப்பினை பார்க்கிறாய்..
அடுப்பில் நெருப்பு சிவப்பாக கனன்று எரிகிறது

உனக்கு நெருப்பு அதிபுதிது
முதன் முதலாக இன்றுதான் அடுப்பின் சிவந்த -
நெருப்புத் துண்டுகளை பார்க்கிறாய்,

நெருப்பு சிவக்க சிவக்க - நெருப்பின் மேல்
உனக்கு ஆசை வருகிறது
நெருப்புத் துண்டங்களை ஒரு தின்பண்டம் போல்
பார்க்கிறாய் நீ..

திரும்பி வெளியே இருந்து வரும் என்னையும்
பார்க்கிறாய்

நான் கீரைவாங்கி உள்ளே வருவதற்குள்
நீ என்ன நினைத்தாயோ ஓடி -
நெருப்பை அள்ளி வாயில் போட்டுக் கொள்ள எண்ணி
விரைகிறாய்

நான் பதறி உன் அருகில் வருவதை கண்டு நீ
எங்கு நான் அந்து உனை தடுத்துவிடுவேனோ என்று
துருதுருவென ஓடி - ஒரு கை நெருப்பள்ளி.......................

கை கருகிய வலியில் வாரி மேலெல்லாம்
இறைத்துக் கொள்கிறாய் -

நான் நெருப்பை சபிப்பேனா???
அடுப்பை சபிப்பேனா????
என் உயிர்; வலியில் கண்ணீராய் சொட்டி
பூமியையெல்லாம் நனைக்கிறது

நீ வாரியிரைத்த நெருப்பின் துண்டுகளை
மிதித்து கொண்டு உனைத் தூக்கிப் பார்க்கிறேன்
நெருப்பிற்கு நீ குழந்தையென்று தெரியவேயில்லை!!!!

vidhyasagar1976@gmail.com