என் முகிலுக்கு ஓர் தங்கை பிறந்திருக்கிறாள்

வித்யாசாகர்

ரு பிஞ்சிப் பூவில்
நெஞ்சு பூத்த சித்திரம் கண்டேன்,
நாக்குதட்டி தட்டி என் இதயம் - அதன் சிரிக்காத
சிரிப்பால் நிறையக் கண்டேன்,
சிப்பி திறந்ததும் முத்து சிரித்தது போல் - அந்த
சிறுவிழி திறந்து கருவிழி எனை காணக் கண்டேன்,
காற்றில் ஆடும் மலர்களின் மகரந்தமாய் - என்
பேச்சில் ஆடும் அந்த துள்ளும் துடிக்கும் கால்களை கண்டேன்,
அழைக்கும் செல்ல சப்தம் கேட்டு - இசைக்கும்
இமைக்கும் அதன் இமைகள் கண்டேன்,
குச்சி குச்சி விரலாலே - இதயம்
பிச்சி பிச்சி விரித்த அந்த அழகு விரல்களை கண்டேன்,
குயிலுக்கு மறந்த ராகம் போல - அதன் 
கீச் கீசென்று கத்திய குரலை கேட்டேன்..
கிளிக்கு வாய்முளைத்த அழகாக - அதன் 
குட்டி வாயில் அப்பா என்றழைக்க - இதோ
இன்னொரு தவமாக நீள்கிறது என் அன்பு மகளுக்கான காத்திருப்பு!!

வாழ்வின் கனவுகளில் - உண்மை சுமந்த
கனவாக மெய்கொள்கிறது சிலது மட்டுமே.
நான் வேண்டிக் கிடைத்த வரத்தில் மற்றொன்று என் அன்பு மகள்.
என் தாய் எனை சுமந்த நன்றியை
என் மனைவி எனை தாங்கிய நன்றியை
என் சகோதரிகள் எனக்களித்த அன்பினை
என் தோழிகள் எனக்குக் கொடுத்த நட்பினை
என் தமிழச்சிகள் வாழ்ந்து சென்ற நல்வாழ்வின் சரித்திரத்தை
இனி அவளுக்காக சேர்த்து வைக்கிறேன் -
அவளின் காலடி பதிந்த என் நெஞ்சில் - இனி
பூக்கட்டும் அந்த பிஞ்சிற்கான ஆசைகள்...vidhyasagar1976@gmail.com