பூனையும் பெண்களும்...

லறீனா அப்துல் ஹக்

இரவினில் தொழுகை
பகலினில் நோன்பு
பக்தி சிரத்தையாய்
வாழ்ந்தாள் ஒருபெண்

**********
வீட்டினில் வளர்த்த
செல்லப் பூனையின்
கழுத்துக் கயிற்றினை
அவிழ்த்திட மறந்து
எங்கோ ஒருமுறை
புறப்பட்டுப் போனாள்

**********
பசியும் தாகமும்
பாடாய்ப் படுத்திட - மிகப்
பரிதாபகரமாய்
இறந்தது பூனை

**********
இறைவனின் தூதரே!
இவள் கதி என்ன?
கேட்டார் ஒருமுறை
அண்ணலின் தோழர்

**********
பூனையின் இருப்புக்கு
வழிவகை செய்யாள்
தானே உயிர்த்திடும்
வழியும் வைக்காள்
அப்பாவிப் பூனையின்
அநியாயச் சாவினால்
அந்தப் பெண்மணி
நரகம் புகுவாள்
தீர்ப்பு கிடைத்தது
நீதியின் தீர்ப்பு

**********
அநீதியிழைத்தவள்
கதியினை அறிந்தோம்
பூனையின் கதிபற்றி
நாமெதும் அறியோம்!

**********
'பொறுமை, கடமை
உனக்கே உரியது
மென்மை, தாய்மை
உன்னிரு கண்கள்!
அருளும் மன்னிப்பும்
உன்னுடை சொத்து
என்றும் பேணிடு
ஏற்றங்கள் பெறுவாய்'
ஒன்றா இரண்டா?
இப்படி இப்படி
எத்தனைக் கயிறுகள்?
எத்தனைக் கட்டுக்கள்!

**********
உன்னுடை உணர்வு
உனக்கெனக் கனவு
விருப்பு,  வெறுப்பு
உனக்கொரு உள்ளம்
இருப்பதை இங்கே
மதித்தவர் யாரோ?
நகர்ந்திடல் கடந்திடல் சாத்தியமின்றி
எத்தனை தளைகள்
உன்னைப் பிணித்தன?
தெரிவுச் சுதந்திரம்
எதுவுமே இன்றி
தருவதை மட்டுமே
நுகர்ந்து நீ வாழ்ந்தாய்...

**********
கண்மணி நபியே!
விடுதலை ஈந்தீர்
பெண்களின் துயரை
என்றோ துடைத்தீர்
ஆயினும் நபியே!
இன்றும் நம்பெண்கள்
பூனைகளாகக் கழுத்தில் தளையுடன்
கொஞ்சம் கொஞ்சமாய்
சாதலும் உண்டே!

**********
அநீதியிழைத்தவர்
கதியினை அறிவோம்
பூனையின் கதியை
யார்தான் அறிவர்?
 


lareenahaq@gmail.com