சட்டத்தில்  இடமுண்டோ ?

முனைவர் ச.சந்திரா

                                        
நிலமகள் பச்சை வண்ண
பட்டாடை களையப்பட்டு
கந்தர் கோலத்துடன் காட்சி !
                          
நாற்று நட்ட பெண்களெல்லாம்
காற்று வாங்கிக் கொண்டு
தீப்பெட்டிஆபீஸ் பேரூந்தில் பயணம்  !
                               
களையெடுத்தவரெல்லாம் இன்று
நூற்பாலைக்கு பறக்கின்றனர்
பருத்திப்பஞ்சை விட வேகமாக !
      
பூமகள் மேனி அளக்கப்பட
சிலுவைத் தழும்புகளாய்
அதில் கல் ஆணிகள்  !
                           
புல்பூண்டுகள் இருந்த இடத்தில்
இன்று கற்குவியல்களும்
கான்கீரீட்  கலவையும் .
               
மந்தையிலிருந்து ஆடுகள்
அனைத்துமே  தப்பின
இலைதழை இல்லாமல் !
          
பசும்பயிர்கள் வாழ்ந்த இடத்தில்
பலமாடி கட்டிடங்கள்
பளிங்கு கற்கள் பதிக்கப்பட்டு  !
                     
ஐந்தறிவு ஜீவனின் சொத்தை
அபகரிக்கும் ஆறறிவுமனிதன் மீது
வழக்கு தொடுக்க மனுநீதி முதல்
மக்கள்  நுகர்வோர் மன்றம்வரை
எச்சட்டத்தில் இடமுண்டு ?
யாரேனும் பதில் சொல்வீரோ ?

                          neraimathi@rocketmail.com