ஆசிரியர் போற்றுதும்!

அகரம்.அமுதா

அஞ்சில் எமைவளைத்து
அமுதனைய கல்வியினை
நெஞ்சில் நிறைக்கின்ற
நேர்த்தியெலாம் கற்றவரே
!

பேசரிய மாண்பெல்லாம்
பிள்ளைகள் எமைச்சேர
ஆசிரிய பணிசெய்யும்
அன்பின் தெய்வங்காள்
!

பொற்போடு எமைநடத்திப்
புகழ்மணக்கும் கல்வியினைக்
கற்போடு கற்பிக்கும்
கடமையிற் பெரியோரே
!

குன்றளவு கொடுத்தாலும்
குறையாத செல்வத்தை
இன்றளவும் எமக்களித்து
இன்புறும் வள்ளல்காள்
!

ஈன்றோரின் மேலாக
எம்நெஞ்சில் நிறைபவரே
!
சான்றோராய் எமைமாற்றும்
சாதனைகள் புரிபவரே
!

எச்செல்வம் அளித்தாலும்
எச்சமின்றித் தீர்வதுண்டு
மெச்சிநீங்கள் அளித்தசெல்வம்
விளிவின்றி வளருமன்றோ
!

அன்னையே தெய்வமென்றும்
அன்பே தெய்வமென்றும்
கன்னின்றோர் தெய்வமென்றும்
கதைகள்பல உண்டெனினும்
பள்ளிக் கூடமெனும்
பண்பட்ட கோயிலின்
உள்ளே எழுந்தருளும்
உயர்தெய்வம் நீங்களன்றோ
!

தாய்சொல்ல முதன்முதலிற்
சேய்பேசும் அம்மொழியே
தாய்மொழியாம் என்றெவரும்
சாற்றும் மொழியினையும்
சேய்நாங்கள் தப்பின்றிச்
செப்புதற்குக் கருத்துடனே
ஆய்ந்தறிந்து ஊட்டுகின்ற
அன்னையரும் நீங்களன்றோ
!

தரிசை சீர்செய்து
தக்கபடி ஏர்நடத்தி
வரிசை பிடித்துவிதை
வார்த்திடுவர் வேளாலர்
அறிவு நீர்பாய்ச்சி
அகந்தைக் களையகற்றி
செறிவுடையோ ராய்எம்மைச்
செய்உழவர் நீங்களன்றோ
!

சிலையின் இறுதிநிலை
சீர்மிகு கண்திறப்பாம்

விளையும் பயிரெமக்கோ
விழிதிறப்பே முதல்நிலையாம்
...
எண்ணோடு எழுத்தென்னும்
இருகண்கள் திறக்கின்ற
திண்ணிய பணிசெய்யும்
சிற்பியரும் நீங்களன்றோ
!

அன்றாடம் எமைநாடி
அறிவு புகட்டுமுமை
இன்றிந்நாள் எம்நெஞ்சில்
இருத்திப் புகழ்கின்றோம்
!

வாழ்நாள் முழுவதையும்
மாணவர் எமக்களித்து
வீழ்நாள் இலாக்கல்வி
விளைக்கும்நீர் வாழியவே
!


agramamutha08@gmail.com