மன்னார் அமுதனின் கவிதைகள்

தோழமை

வெட்ட வெளி தனிலே - மனம்
வெதும்பி அழுது நின்றேன்
தொட்ட ணைத்து என்னைத் - தோழன்
தேற்றி அணைத்துக் கொண்டான்

பட்ட மரத்தில் இடி
பாய்ந்து விழுந்தது போல்
சுட்ட சொல் கொண்டு - எனைச்
சுற்றம் தூற்றுகையில் (வெட்டவெளி)

நீச உறவுகளில் - நான்
பாசம் வைக்கவில்லை - மாறு
வேசம் கட்டிக் கொண்டு - அவர்போல்
வாழத் தெரியாததால் (பட்ட மரத்தில்)

அட்டை மனிதர்கள் என்
இரத்தம் குடிக்கையிலே - உடல்
வெட்டப் படுவதைப் போல்
வலி கொன்று தின்னுவதால் (நீச உறவுகள்)


எங்கிருக்கிறாய்... என்னவளே....

யார் நீ?
எப்படி இருப்பாய்?
ஒல்லிக்குச்சியா?
பூசணிக்காயா?
பனைமரமா?
குள்ளக் கத்தரிக்காயா?

ஆனால்
நிச்சயமாய் கேள்விக்குறிகளின்
நிரந்தரப் பதிலாய்...
பெண்ணாய்,
பெண்ணியத்தோடு...

தோள்களில் சாய்ந்தும்,
தலைமுடியைக் கோதியும்,
மூக்கோடு மூக்கை உரசியும்,
என் உயிரைப் பிழியப்போகின்றாய்...

தனிமையை...
அழுகையை...
அன்பை...
ஆண்மையை....
முழுமையாய் ஆக்கிரமிக்கப் போகின்றாய்..

நம் சிசுவை வயிற்றிலும்,
உன் நினைவுகளை என் இதயத்திலும்
பாரமின்றி நிரப்பப்போகின்றாய்...

நினைக்க... நினைக்க
இனித்தாலும்...

தொட்டிக்குள் நீந்தும்
மீனைப் போல

உன்னையே சுற்றும் என்
கற்பனைத் தாளில்

ஏனோ நீ மட்டும்
விவரிக்கப்படாத விபரமாய்...

நானோ கிறுக்கப்படாத
வெற்றுக் காகிதமாய்...

முகம் தெரியாத உனக்காக,
முகவரி இடப்படாத
வாழ்த்து அட்டைகள்,
பரிசுப் பொருட்கள்...
கூடவே நானும்...
amujo1984@gmail.com