தாய் நிலம்

நிரந்தரி கதிர்

எனக்குள்ளே புதைந்து
துள்ளி விளையாடி
உருண்டு பிரண்டோடி
ஒட்டி உறவாடி
என்னோடு வாழ்ந்தவனே
திரும்பி வா
என்னிடத்தில்!

என்னை விட்டு நீ பிரிந்தால்
அள்ளி எடுத்து என்னை
தொட்டுகதை பேசி
என் மேல சாய்ந்திருந்து
விளையாட யார் வருவான்....
பிற நாடு போனவனே

என்னை நீ பிரிய
தென்னையும் பனை மரமும்
பூப்பூக்கும் பூஞ்செடியும்
என்னோடு சேர்ந்திருந்து
உனை நினைந்து
வாடுகையில்....

பால் தந்த பசு மாடும்
துள்ளி வந்த வெள்ளாடும்
நன்றியுள்ள குட்டிநாயை
நாதி என்ன கேட்கையிலே
கூவிய சேவலுக்கும் கூவ
மனம் ஏவலையே..

உன் பாதச்சுவடுகளை
மடியினிலே தாங்கி நின்றேன்
எனை காலால் நீ
மிதிக்கையிலும் உன் நிழலையும்
நான் ஏந்தி வந்தேன்
மறந்ததேன் ஞாபகங்கள்.....

நெல்லரிசி சோறு பொங்கி
முற்றத்தில் பந்தி வைத்து
அன்று எட்ட நின்ற வெண்ணிலாவை
கிட்ட வர நீ அழைத்து
ஏமாற்றி அனுப்பி வைத்தாய்..

இன்று சுற்றி வரும் அந்த நிலா
எட்டி எட்டி எனை பார்த்து
ஏளனமாய் சிரிக்கிறதே
என்ன செய்வேன் என்னவனே
மடி சேர வாராயோ...

சொந்தங்கள் பல வந்து
உரிமை மை இடவே என்னுரிமை
நீ என்று சொல்லமுடியாமல்
நெஞ்சு எனக்கு வெடிக்கையிலே
பூகம்பமாகி......

அழுது அழுது ஓயாத என்
விழியிரெண்டும் மடை திறக்க...
சுனாமி நான் ஆகின்றேன்...

மீண்டும் நீ வருவாயோ
என் மடியில் தலை
சாய்வதற்கு!....