தமிழன்னையின் உலா

முனைவர் ச.சந்திரா         

நாவலத்தின் முதன்மொழி தமிழ்மொழி !
முச்சங்கம் கண்ட மூத்தமொழி தமிழ்மொழி !
தமிழே !நீ கரிகாலன் அவையில் கன்னித்தமிழாய்
பாண்டியன் அவைதனில் பைந்தமிழாய்
சேரன் செங்குட்டுவன் அவையில் செந்தமிழாய்
மொத்தத்தில் மூவேந்தர் அவைதனில் முத்தமிழானாய் !
ஆணுக்குப்பெண் இணையென நிரூபித்த நித்திலத்தமிழ் நீ !
ஆம்.! ஆதிமந்தியாரின் அரசவையில் அழகுதமிழ் நீ !
ஔவையாரின் அருகில் அமிழ்தத்தமிழ் நீ !
வெள்ளிவீதியாரிடம் விளையாடிய வெண்தமிழ் நீ !
பார்மகளிரின் பாவிலோ பசுந்தமிழ் நீ !
ஆண்டாளின் அருளில் அற்புதத்தமிழ் நீ !
மூவாத் தமிழே !நீ தானே அன்று
மோசிக்கீரனுக்கு முரசுக்கட்டிலை அளித்தாய் !
பாரிக்கும் கபிலனுக்கும் பாலம் அமைத்தாய் !
திருவள்ளுவரிடம் திளைத்தாய் !தித்தித்தாய் !
தொல்காப்பியத்தில் துலங்கிய தூயதமிழாம் நீ
கம்பனின் கரங்களில் கற்பூரத் தமிழாய்
இளங்கோவடிகளின் இதழில் இன்பத் தமிழாய்
நாயன்மார்களின் நாவில் நறுந் தமிழாய்
ஆழ்வார்களின் அன்பில் அருந் தமிழாய்
உ.வே.சாவின் உயிரில் உவப்புத் தமிழாய்
சித்தர்களின் சிந்தனையில் சித்திரத்தமிழாய்
வீரமாமுனிவரிடம் வீறுதமிழாய் இருந்த நீ
மகாகவியிடம் மயங்கிச் சாய்ந்தாய் மதுரத்தமிழாய்
பாரதிதாசனிடமோ பண்பாடினாய் பாமரத்தமிழில்
கண்ணதாசனிடம் கனிந்தாய் !காவியத் தமிழாய்
இன்னும் எத்தனை எத்தனை வடிவம்தான் நினக்கு
தமிழே !நீ தொன்மொழி !தென்மொழி !தேன்மொழியுங்கூட
எளிமை இனிமை பழமை புதுமை
கலந்த பொன்மொழி !நீ எம் கண்மொழி !
தமிழன்னையே !இலக்கணமாய் பின் இலக்கியமாய்
உரைநடையாய் உலவிய நீ இன்று
புத்தாடை புனைந்து புதுக் கவிதையாய்
நடனமிடும் நற்காலம் !இது இலக்கியப் பொற்காலம் !
இக்காலம் நிலைபெற தமிழா !தமிழ் உமது முரசமாகட்டும் !
தமிழ்ப் பண்பாடு நமது கவசமாகட்டும் !
தமிழ் சார்ந்த அறிவு உம் படைக்கலம் ஆகட்டும் !
அன்னைத்தமிழ் அலைகடல்தாண்டி அகிலம் எட்டட்டும் !