மறுபக்கம் - பாலியல்

மன்னார் அமுதன்                            
                                           
மதுவோடும் மாதோடும்
சூதாடும்
மன்மதனின்
கதையெங்கும்
காமம் தெறிக்கும்

பகலென்ன இரவென்ன
படுக்கைக்கு
போய் விட்டால்
விரல்
பத்தும் தேகம் கிழிக்கும்

நாடோடி போலாகி
தேடோடிப்
பெண் சுகத்தை
எழுத்திலே
கருக விடுவான்

கோடிட்டுக் கோடிட்டுக்
கோமானே
அவனென்று
போற்றியவன்
படித்துக் கெடுவான்

பாலியலின் பலபக்கம்
அறிந்தவனாய்ப்
பகட்டுபவன்
நாளொன்றில்
மணமுடிப்பான்

ஊசியிலே நுழையாத
நூலொன்றைக்
காவியவன்
இல்லறத்தில்
விரதமென்பான்

போருக்கு ஆகாத
வாளொன்றை
அழகிடையில்
அணிதற்கு
அவள் மறுப்பாள்

உலகினிலே பரத்தைகளை
உறவினிலே
வென்றவனை
உற்றதுணை
 தோற்கடிப்பாள்

 


amujo1984@gmail.com