வசீகர மொழிகாவி

எஸ். பாயிஸா அலி,கிண்ணியா

அறைந்து மூடிய சாரளத்தோரமாய்
சிலந்திகள்
சித்திரம் வரையத் தொடங்குகிற வேளை
வந்தமர்கிற ஹம்மிங் பறவையின்
மெதுமை படர்ந்த கூரலகு சிந்துவது
எந்தப்பூவின் மகரந்தமோ
கண்ணாடி மணக்கிறது.
காற்றாடி போலே இடைவிடாது சுழலுகிற
மெல்லிய சிறகசைவினிலே
ஊதித் தள்ளுகிறது பெரும்பெரும் பாறைகளை.
உதிர்ந்த துகள்கள் ஒவ்வொன்றுமேயதன்
வசீகர மொழிகாவிப் பறக்கின்றன
மிகப்பரவசமாய்.
ஆனாலும்
வருந்துதலை மட்டுமே அவாவியபடி
மேலுமிறுக விடுகிறேன் சாரளங்களை
யார்தான் முனைவார்
ஒருமுறை தீண்டிய புற்றினை
மறுமுறையுஞ் சீண்டிப் பார்க்க.


sfmali@kinniyans.net