முதலாளி...

இ.பா.சிந்தன்

கட்டிலை விட்டெழுந்து
கடிகாரத்தைப்பார்த்தால்
காலை மணி ஒன்பது!

முக்கால் இரவினை
முழித்துக்கழித்தும்
மறையவில்லை நினைவினின்று
முதலாளியின் வார்த்தைகள்!

'சொன்ன நேரத்துக்குள்ள
சொன்ன வேலைய
செய்யமுடியலன்னா
எதுக்கு வரீங்க ஆபீசுக்கு?
.........'

அரைநாள் தாமதத்திற்கே
அள்ளித்தெளித்துவிட்டானே!

விடுமுறை நாளின்றை
வீணாக்க மனமின்றி
மறக்க நினைத்தேன்
நேற்றைய நிகழ்வினை!

தேநீர்க்கோப்பையை கையிலெடுத்து
தேடிக்கொண்டிருந்தேன்
இன்னும் வராத
இன்றைய நாளிதழை!

வாசலைப்பார்க்கையில்
வந்துகொண்டிருந்தான்
நாளிதழ் போடும் சிறுவன்!

'இத்தனை மணிக்கா பேப்பர் போடுறது?
இந்நேரம் அந்த செய்தியே பழைசாயிருக்கும்...'

'சார்! அதுவந்து....'

'வேலைய ஒழுங்கா செய்யாம
வெட்டியா காரணம் சொல்லாத...'

மெதுமெதுவாய் நானும்
முதலாளியாகிக்கொண்டிருந்தேன்!


 

chinthanep@gmail.com