ஒற்றுமையில்லா வனத்தின் வதை - வித்யாசாகர்!!

வித்யாசாகர்

ரு கடல் தாண்டிய
வனம்  தான் -
நான்  வசிக்கும் காடு..

ஒற்றுமை எனும்
கடல் தாண்டிய வனம் அது.

சுயநல மரங்களும்
மனிதரை விட அதிகம்
மிருகங்களும் வாழும் காடு அது.

மிருகங்களை தின்று
மனிதர்கள் வாழும்
அந்த வனத்தில் - கடவுளுக்கே
பஞ்சமெனில் பாருங்களேன்!!!!!!!

அங்கே -
மழைக் கூட
லஞ்சமும் ஊழலுமாகத் தான்
பொழிகிறது.

பொறாமையும்
ஒருவரை ஒருவர் அழிக்கும்
வஞ்சமும்,
இடிபோல் இரக்கமற்ற வானில்
தினமும் இடித்துக் கொள்கின்றன - அந்த
வனப்  பகுதியில்.

காவலுக்கு  திருடர்களும்
நிற்கிறார்கள்,
ஆள்வதற்கு அங்கே
மனிதரையும் கொல்கிறார்கள்,
பணம் மட்டுமே காய்த்து
பிணங்களின் மீது புழுத்துக் கிடங்கும்
வனமது  கொடூர வனம்.

செல்வங்கள் தெருவெல்லாம்
கொட்டிக் கிடக்கின்றன அங்கே,
ஆனால் அவைகளை எல்லாம்
மிருகங்கள் எடுத்து
கக்கத்தில் வைத்துக் கொண்டு அலைவதில்
மனிதர்களுக்கங்கே -
தண்ணீர் கூடக் கிடைப்பதில்லை.

இதில் வேறு -
மிருகங்களின் முதுகில்
தழும்புகளும் உண்டு,
ஜாதி மதம் இனம் எனும்
பெரிய பெரிய தழும்புகள் அது.

மனிதனின்  தேவைக்கென்று
எண்ணிச் செய்த கத்தியில் -
மிருகங்களே இங்கு
அறுபடுகின்றன  வேற்றுமையினால்

அறுபட்ட இடமெல்லாம்
இன்று சுயநல ரத்தம் பொங்கி
மனித உயிரை மொத்தமாய் குடிக்குமளவில்
தாகம் கூடிவிட்டதிந்த மிருகங்களுக்கு.

நான் இவைகளை எல்லாம்
பார்த்தவாறு -
உலக புள்ளியின் ஓரத்தில்
வெறித்துப் பொய் நிற்கிறேன்,
என்னைப் போல் இன்னும்  சிலர்
ஆங்காங்கே -
எனை கடந்தும் கடக்காமலும்
திரிகின்றனர்.

ஒரு கட்டத்தில்
நானே கூட
மனிதனா ?
மிருகமா?
தெரியவில்லை,
சிலநேரம் மனிதர்கள் என்னிடம்
பகையாடுகின்றனர்,
சிலநேரம் மிருகங்களும்
உறவாடுகின்றன..

மனது; வாழும் இரத்தத்திலிருந்து
வற்றிப் போய் -
வெளிறிய முகத்தின்
கீறல்களாய் வெளிப்படுகின்றன.

என்னசெய்வது?
என்னசெய்வது?
அந்த ஒற்றுமை எனும் கடலை தாண்டி
ஏனிந்த வனத்திற்கு -
வந்தோமோ எனும் கவலையில்
வனம்  ஒரு வதையாகவே நகர்கிறது எனக்கு!!!!!!




vidhyasagar1976@gmail.com