காற்றுவெளி தாண்டியும்

எஸ். பாயிஸா அலி,கிண்ணியா

பாட்டன்வழியாய் வந்தமர்ந்திருக்கிறதென்
வேலியோரமாய் ஒற்றைப்பனை.

இன்னொரு கதியாலாகவும்
பழம் நுங்கு கிழங்கு மட்டையுமென
பயனதிகந் தந்தாலுமே
பயிரென விதைத்தவைகளுக்கோ
இல்லையேல்
பரம்பரைக்குமாய் கட்டி முடித்திருக்குமென்
இல்லத்திற்குமோ
வில்லங்கமாக விடக்கூடாதென்றே
புழங்கும் சகலவித வெட்டிகொண்டும்
வெட்டிக்கொண்டேயிருக்கிறேன்
விரிக்குமதன் குருத்துகள் ஒவ்வொன்றாய்

எனினும்
காற்றுவெளி தாண்டியும்
விரவிக்கிடக்குமதன் வேர்மயிர்களோ
இன்னமும்
துழாவிக் கொண்டேயிருக்கிறது மண்ணை
தன் உயிர்ப்பிற்கான
ஈரலிப்பை வேண்டியபடி


sfmali@kinniyans.net