இடதுகை காதல் கவிதைகள்

ஆத்மார்த்தி

(காதல்--மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்கும்)
...............................................
1.எனக்குத் தெரியாதவைகளையெல்லாமும்
என் முன் கொட்டி வைத்து
அழகு காட்டிக்கொண்டிருந்தது
காலம்.
இரண்டு சாலைகளின் சந்திப்பில்
உன் முதல் தோற்றம்.
மெல்லப் பொழியத் தொடங்கியது
நம்மிருவர்ப் பொது மழை.
தானே தன்னை
வடித்துக் கொள்ளும் இக்கவிதை
............................................
2.மழையை கொஞ்சம் கையிலேந்திக் காட்டுகிறாய்.
உன் கையில் நிறம் மாறுகிறது மழை.
தரைத்தேக்க நீரில் அதைக் கொட்டுகிறாய்.
உனது நிறமாய்ப் பெருக்கெடுத்து
ஒடத்தொடங்குகின்றன
தெருமழைத் தாரைகள்.
அதற்குப் பிந்தைய மழை உன்னுடையதாகிறது
நீ சென்றுவிடுகிறாய்.
மழை நின்றுவிடுகிறது.
தேக்கநீரில் நீந்திக்கொண்டிருக்கின்றன
நீ உதிர்த்துச் சென்ற
கைரேகைகள்
...............................................
3.எதையோ சொன்னதற்கு
வெட்கப்பட்டுச் சிரித்துச் சென்றாய்.
உனக்காகவே வெட்கமும் அதற்காகவே நீயுமாய்
உறைந்த ஒற்றைக் காட்சியைப்
பத்திரம் செய்து கொள்கிறேன்.
இப்படியே இருந்துவிடப் போவதில்லை
நீ.
இப்படியே இருந்துவிடப் போவதில்லை
வெட்கம்
இப்படியே இருந்துவிடப் போவதில்லை
எதுவும்
என்பனவெல்லாம் உண்மைகள்.
அவற்றைத் தூர எறிகிறேன்.
பொய்களை மட்டும் நம்பிக்கொள்கிறேன்.
....................................
4.வெண்சங்கின்
கடல்புணர்ச்சியை
ரத்து செய்தேன்.
சங்கினை ஏந்தியபொழுதில்
தாரையாய் வழிந்து கலந்தது
கடைசிக்கடல்.
எந்த நதியுமில்லை
இந்தக்கலவிக்கு
என்ன பெயர் என்றேன்
எதிலிருந்து வந்ததோ
அதனுள் கலந்தது
அது
பெயரற்றது என்றாய்.
முத்தமிட்டுப் பிரிகையில்
நீ
இதழ்களைத்
துடைத்துக்கொள்வாய்
போல அது.
.......................
5.ஏன் இடது கை..?
இது என்ன காதலென்று
கேட்கிறார்கள்.
எப்பொழுதும் மௌனம் ஒன்றைப்
புன்னகை பூசி
தப்பி பிழைத்துவிடுகிறேன்.

எப்படிச் சொல்வேன்.
தோள் சரித்துனைத் தாங்கி
இதழ்கள் இணைத்து
உயிர் பரிமாறிய
உக்கிரமுத்தம்
இடது கையில்
சாந்தமாய்த் துவங்கியகதையை...
.........................
6.ஊடல் வேறு மழை
திராவகத் துளிப் பெரு வெள்ளம்
மௌனம் பேரிரைச்சல்
விளிம்புவிழி உக்கிரப் பார்வை
நெருங்கப் பயம்.
நீ மட்டும் விலகி நடக்கிறேன்.
நான் அங்கேயே நின்றுகொண்டிருக்கிறாய்.

சாலை கடக்கும் ஆடுகள்
கணக்குத் தப்பாமல்
வீடு திரும்புகின்றன
மேய்ப்பவன்
தொலைந்த நாளிலும்.
போல அது.
.................
7.கண நேரத்தில் அழித்துப்பெய்ததற்காய்
இன்னும் மிச்சமிருக்கிற
சாலைச்சித்திரத்தின்
செவ்வகத்தில்
சிதற்றிச் சென்ற காசுகளனைத்தையும்
சேகரித்த சித்திரக்காரன்
கோபாவேசமாய்
வான் நோக்கி எறிவானே
உன் கோபம்
போல அது.
 ..............
8 நன்றாய்ப் புரிகிறது.
நான் செய்திருக்கலாம்
என நீ முன்வைப்பதெல்லாவற்றிலும்
உள்ளிருக்கும் உன் நியாயங்கள்.

உன்னைத் தேடி வந்திருக்கலாம்.
உன் கோபம் தணித்திருக்கலாம்.
உன் மன்னிப்புகளை இறைஞ்சி இருக்கலாம்.
நீ திறக்கும் வரை உன் கதவுகளைத்
தட்டியபடி நின்றிருக்கலாம்.
உனது பெயரை
மீண்டும் மீண்டும் உச்சரித்தபடியே
கதறியிருக்கலாம்.

என் வாசற்கதவுகளை
திறந்து அடைக்கையிலெல்லாமும்
நீ வந்துவிடாத வருகைகளை
மனனம் செய்கையில்
கழியுதென் தனிமை.
..........
9 தொலைபேசியில் பேசுகையில்
சாதாரணமாய்
நிகழ்ந்து விடுகிறது
பரஸ்பரம் காதலிக்கிறோம்
எனச்
சொல்லிக்கொள்வதும்
செல்லப்பெயர்களை
அழைத்துக்கொள்வதும்
வர்ணனைகளும்
எல்லாவற்றுக்கும்
கடைசியில்
தவறாமல்
இடம்பெற்று விடுகின்றன
முத்தங்களும்.
நேரினில் மௌனம்
உடைப்பது
கடினம்.
..........
10 ஒரு பிரிதல் நிகழ்ந்திருக்கிறது.
ஒரு நிமிடம் முன்பு.
கதவுகளை ஓங்கிச் சார்த்திச் சென்றாள்.
ஒரு நிமிடத்திற்குள் மீண்டு வந்துவிடக் கூடும்.

ஒரு நிமிடம் என்பது
இன்னும் முடிந்துவிடவில்லை.
அந்த நாள்
அந்த வாரம்
அந்த மாதம்
அதன் பின்னான காலம்

இரண்டு முட்களின் மீதான நம்பிக்கையில்
காலம் கழிவதாக
நம்பிக்கொள்ளுங்கள்.
 
ஒரு நிமிடம் இன்னும்
முடிந்துவிடவில்லை.
..................
11 ஆழ்நித்திரையில்
கனவொன்றின் வாசலில்
ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருந்த
உன்கரம் பற்றிக் கேட்டேன்.

"
என்னை விட்டுவிலகியது போலவும்
என்னை வெறுப்பதாகவும்
இனிப் பேசவொன்றுமில்லை எனவும்
பிரிதலைச் சாதாரணமாய்
எடுத்துக் கொண்டதாகவும்
நீ காட்டிக் கொள்வதெல்லாமும்
நடிப்பு தானே..?

நீ சொல்லிச் சென்றாய்.
"
நடிப்பது போல் நடிக்கிறேன்"
என்று
...............
12. என்னைச் சமாதானப்படுத்த
வந்திருக்கிறாய்.
நல்லது.
ஒரே ஒரு நிமிடம்
எனக்குக் கொடு.
என் கருப்புக் கண்ணாடியை
அணிந்து கொள்கிறேன்.
அதில்
என் கண்களில் துளிர்த்த
நீர்முத்துக்கள் சிதறுகையில்
நீங்கள் இரண்டு பேர்
எங்கனம் கோபப்படுத்திச் சென்றீர்களோ
அதுபோலவே
சமாதானம் செய்யுங்கள்.
.............................
13. நீயாவது
.................
நானாவது
அமைதிகாத்திருக்கலாம்.
சொல்லியிருக்கலாம்.
இறங்கிவந்திருக்கலாம்.
முதலில் பேசியிருக்கலாம்.
விட்டுக் கொடுத்திருக்கலாம்
அதிகப்பிரியம் காட்டியிருக்கலாம்
பழையதை எண்ணியிருக்கலாம்.
தேடிவந்து சந்தித்திருக்கலாம்.
ஒன்றுமே நடவாதது போல் நடித்திருக்கலாம்.
பிறரிடம் கருத்துக்கூறாதிருந்திருக்கலாம்.
மன்னித்து மன்னிப்புக் கோரியிருக்கலாம்.
ஓடிவந்து கண்ணீர் காட்டியிருக்கலாம்.
.................
14. ஒரு காதல் முற்றுப்பெற்றதையும்
இன்னொரு காதல் துளிர்ப்பதையும்
ரத்தவாசனை இன்றி உணர முடியாது.
இடைவெளிப்பொழுதுகளில்
இரண்டு கன்னங்களிலும் அறையும்
தனிமை.

பற்றுதல் தேடியலையும்
மனசு.
சாய்ந்து அழத் தோள் தருவதோ
குமுறிக் கலைய மடி தருவதோ
ஆரம்பித்து வைக்கும்
இன்னொரு காதலை.

வேவ்வேறு பெயர்களில்
பயணிக்கும் நீர்
போல அது.

........................
முடிகிறது.
முடியாதது.
முடியும்

 

aathmaarthi@gmail.com