நான் 'மனம்' பேசுகிறேன்

மன்னார் அமுதன்


மந்தி போலப் பாய்கிறேன்
இங்கு மங்கும்

மரக்கிளைகள் தவிர்த்து
மானுடத்தில் தழைத்து
மனங்களிடையே மனிதத்தை
தேடித் தேடித் தொலைகிறேன்

இதைவிட அதுவும்
அதைவிட மற்றொன்றும்
ஒன்றை விட ஒன்றும்
எப்போதும் பெரிதாகவே
தெரிகிறது எனக்கு

'இன்று' எப்போதும் போலவே
தனக்கேயுரிய
தாற்பரியத்தோடே புலர்ந்தாலும்
எரிந்தழிந்த
நேற்றையச் சாம்பலையும்
மலரவிருக்கும்
நாளைய ஆம்பலையும்
எண்ணி எண்ணியே
இன்றைத் தொலைக்கிறேன்

என்னையடக்க முயன்று முயன்று
அவனும் தோற்கிறான்

அவனின் காயங்கள்
எல்லாம் என் அத்துமீறலின்
அடையாளங்கள் தான்

என் தோட்டத்திலும்
குறிஞ்சியைப் போல் ரோஜாக்கள் பூக்கும்
நான்
இரசிக்கத் தொடங்கையில்
தியானங்களால்
என்னையவன் கட்டுவான்

கால்கள் இறுகும்
மூச்சு முட்டும்
முடிவுறாத இரவுகளில்
என் பூக்களைக் கொல்வான்

பின்னிரவில் சிறிது நேரம்
ரணங்களின் வலியால்
அழுதுகொண்டே உறங்கிப்போவான்

என் துன்பமும்
என்னின்பமும்
என்னுள்ளேயே அமுக்கும்

என்றாவது ஒருநாள்
அவன் இருதயம்
இருப்புக் கொள்ளாது கனக்கும்

இரத்த நாளங்கள்
புடைத்து வெடிக்கும்

அன்றும் அவன் நல்லவனாக
இறந்து விடுவான்

நானோ
நிறைவேறாத ஆசைகளுடன்
வெளியில் வலம் வருவேன்



amujo1984@gmail.com