இரவின் மடியில்

பி.அமல்ராஜ் - மன்னார்

இருட்டுப்போர்வையில்
சின்ன ஓட்டை
திருட்டுப்பார்வையில் - அந்த
வண்ண நிலா..

வாய் பிளந்த வானம்
வருடிப்போகும் மேகம்
ஏன் இந்த வேகம்
வானோடு இல்லையா மோகம்?

மேலே கறுப்பாய் வானம்
கீழே வெறுப்பாய் நான்
போர்த்திய முன்னிருட்டில்
சாத்தியபடி என் மனசு..

சிரிப்பதற்கு மனமில்லை
மரிப்பதற்கும் விதியில்லை
என்னிலை புரிந்ததோ என்னவோ
மூச்சுக்காற்றிலும் சூடில்லை.

விண்மீன்கள் பல் இழிக்க
விண் நிலவும் பகல் தெழிக்க
முன்னிரவு விடிந்து விழிக்க
என்னிரவு முடிந்துபோகிறது
வெறுமையாய்...

நிலவே நீ
சுட்டவில்லை.
உன் பகலிலும்
சுத்தமில்லை.
ஆசை ஆசையாய் பார்க்கும்வரை
உன் அழகில்கூட ஒரு
அர்த்தமில்லை.

என் தனிமைக்கு
நீ காவல். - எனக்கோ
இருட்டில் காதல்.
முட்டி போகும் காற்றுக்கெல்லாம்
முடிந்துபோகும் - என்
கற்பனையோடு மோதல்.

ஒற்றை இரவு
இரட்டை நிலா
ஒன்று நீ - வானில்
மற்றொன்று அவள் - மனதில்.
 

a_mal22@yahoo.com