நகரத்திற்கு ஓடி வருபவர்கள்

ஆத்மார்த்தி

அவன்:
தீராநதிக்கரையில்
சோராமற் காத்திருந்தேன்
வாரேன்னு சொன்னவளே..நீ
வாராமற் போனதேனோ..?

அவள்:
ஊரும் உறங்கட்டுமே
உலகம் அடங்கட்டுமே
யாரும் பாக்குமுன்னே
நானும் கெளம்பி வாரேன்...

ஊரறியா ராப்பொழுதில்
நாங்கெளம்பி வந்த பின்னே
ஊருக்குள்ளே திரும்பிவந்தா-அது
ஊரறியத் திரும்பவேணும்.

அவன்:
நடு நெத்திப் பொட்டு  வெச்சு
இரு கண்ணில் மையெழுதி
உதட்டோரம் கன்னத்துல
சிறிசா ஒரு திருஷ்டிப்பொட்டு.
முழமுழமா மல்லிப்பூவு
சரம் சரமா தங்கமால
சரசரக்க பட்டுச்சேலை.
புதுக்கருக்கா கூட்டிப்போவேன்.

அவள்:
நாலுபேரு பாத்திருக்க
ஊரு பேரு காத்திருக்க
காரு வெச்சு போக வேணும்-மாமா
வாசல் போயெறங்க வேணும்.

பாக்குறவுக மூக்கு மேல
வெச்ச கை மறக்க வேணும்.
ஆலாத்தி எடுத்த பின்னே
நாம வீதி சனம் வாழ்த்த வேணும்.

அவன்:
நெனப்பெல்லாம் நல்லாருக்கு.புள்ள
பொளப்பில்ல சரியா இல்ல..
நீதி சொல்ல வேண்டியவுக
சாதியல்ல பாக்குறாக..?

அவள்:
மனசு ரெண்டும் ஒத்த பின்னே
காசென்ன பணமுமென்ன..?
யாரும் வந்து வாழ்த்த வேணாம்..
நாம தூரமாவே போவோம் மாமா..

அவன்:
வேற ஊரு போவோம் புள்ள..
சொந்தபந்தம் தேவையில்ல.
சாதிமதம் பிரிவில்லாத
மனுஷ மக்க தேடி போவோம்.

அவள்:
தீராநதிக்கரையில்
சோராமற் காத்திரு நீ
வாரேன்னு சொன்னபின்னே
எப்படியும் வந்திருவேன்.


 

aathmaarthi@gmail.com