என் காதல்
த.எலிசபெத்
(இலங்கை)
என் காதல்
கை கோர்த்து பூங்காக்கள் தோறும்
பூரித்திட்டதில்லை...
கடற்கரை மணலில்
கால்கள் பதித்ததில்லை
காற்றுவாங்கி
காலாற காதல் வளர்த்ததில்லை...
காதலர்தின கொண்டாட்டங்களில்
களித்ததில்லை
பரிசுகளால்
பட்டைதீட்டப்பட்டதில்லை....
சந்துக்கள் தோறும் சந்தித்து
சமூகக் கண்களால்
சவுக்கடிவாங்கியதில்லை
ஊர்வாய்கள்
உமிழ்ந்து தூற்றியதில்லை...
உயிருக்குள் சுமந்து
உணர்வுகளை நேசித்து
உள்ளத்தால் வளர்த்த
உண்மைக்காதலிது...
இரவுகளின் துணையோடு
இதயத்தின் நாதங்களை
கவியாய் மொழிபெயர்த்த
காவியக்காதலிது...
வீணென்று சொல்வதற்கும்
வீண்வார்த்தகளிதிலில்லை
விளையாட்டாய் கோபித்து
செல்லமாய் சண்டையிட்டு
சமரசமான சாதாரணக்காதலில்லை...
பொத்தி பொத்தி பதுக்கிவைத்தும்
பொசுக்கென்று முளைவிட்டு விருட்சமாயிடா
கண்ணீர் குவளைக்குள்ளே
நினைவுகளால் நீந்திவரும்
நிறைவேறாக்காதலிது -என்
நிர்கதியான காதலிது...
thangarajelizabeth@yahoo.com
|