பாக்கியவதிகள்

கிண்ணியா எஸ். பாயிஸா அலி

ஒட்டிக் கிடக்கும் வர்ணப் பூச்சுக்களை விட்டும்
ஒதுங்கிப் போவெனத்தான் சொல்லுது
ஓயாது உள்ளொலிக்குமோர் அசரீரி.
பலவேளைகளில்
பாதப் பெருவிரல் சுரண்டுகிற
செல்லப் பூனைக் குட்டியின் குழைவொலியாகவும்
மிகச்சில பொழுதுகளில்
அதுவோர் அடிமைக்கான அதிகாரக் குரலாயுங் கூட.
திரிக்கவும் உரிக்கவும் மட்டுமே விழைகிற
கூர்நகங்களிடையேயான தொடர் பயணங்களுக்குள்
எப்படித் திறப்பேன் முகத்திரை.
அரங்கும் தளமும்
அவளுக்குமென்றான பெருமித முகங்களின்
மறுபுறத்திலே பதிந்து கிடக்கிற ஆழமான கீறல்களூடே
மெல்லமாய் உணர்கிறேன் ....
வீடும் அது சார்ந்ததும் மட்டுமேயான
ஒற்றைச் சிந்தனைக்குள் நிறைவு கண்ட
உம்மம்மாக்கள்தான் பாக்கியவதிகள்.
 

sfmali@kinniyans.net