ரகசியக் கதவும் மந்திரச் சாவியும்

போதிபாலன்   
                             

திசைவெளியெங்கும் இருக்கும்
ரகசிய கதவுகளைத் திறக்கும்
சொல்லின் சாவியைத் தந்திருந்தான் மந்திரவாதி
தவறான கதவுகளை திறப்பவர்கள்
நச்சரவம் தீண்டி சாவர் என சபித்திருந்தான்
அவன் திறந்த கதவின் அப்புறத்திலிருந்து
பிரிந்து சென்றன இரண்டு புதிர்ப் பாதைகள்
ஒன்றில் தகிக்கும் கோடையால் சுட்டெரிக்கும் கட்டிட பாலைகள்
வழியே முடிவற்று நீளும் இரக்கமற்ற தார்ச்சாலைகளில்
கவனமற்ற வாகன ஓட்டிகளால்
அரிதாய் கடக்கும் காதலின் அபூர்வ கீரிப்பிள்ளைகள்
தலை நசுங்கி இறந்து கொண்டிருப்பதைக் கண்டான்
மற்றொரு பாதையில்
கொடிய இருள் மூடிய வனப்பாதையின் வழியே
நச்சரவங்கள் தீண்டி உயிரினங்கள்
இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ந்தான்
அதன்பிறகு அவன் புத்தி பேதலித்துப் போனான்
வெகுநாட்களாக அதன்பிறகு திறக்கப்படாத கதவுகளைக்
கண்டு அவன் நச்சரவம் தீண்டி மாண்டதாய் பேசிக் கொண்டனர்
கனவின் விரிந்த வானத்தின் வழியே
ஒருநாள் மர்மமாய் ஊருக்குள் புகுந்த மந்திரக் கிழவன்
இம்முறை சாவியை இவனிடம் தந்து விட்டிருந்தான்
தீமையின் கதவுகள் நரகத்திற்கும்
நன்மையின் கதவுகள் சொர்க்கத்திற்கும் செல்லும்
பாதைகளைக் காட்டும் என்றான்
எது அந்த கதவு என்று யாருக்கும் தெரியாது என்று மறைந்தான்
நச்சரவம் தீண்டி செத்தவர்கள் குறித்தும்
சொர்க்கம் சென்று மறைந்தவர்கள் குறித்துமான
கதைகளை சொல்லியபடி திசைவெளிகள் எங்கும்
ரகசியத்தின் கதவுகள் சிதறிக் கிடப்பதைக் கண்டான்
தன்னிடம் இருக்கும் சாவியால் ஒரு கதவை திறந்தான்
அதன் பிறகு மீண்டும் அந்த ஊரை கதைகள் சூழ்ந்து கொண்டன,



bothibalan@yahoo.in