உன்னிரு மின்வரிகள்

கிண்ணியா எஸ். பாயிஸா அலி

கமழும் பூக்கூடையாய் பாசத்தை மட்டுமே ஏந்தி வருமென்
ஆயிரங்கேள்விகளுக்கோர் ஒற்றைப் பதிலாய்.....
வானம் பத்திரப் படுத்தும் அபூர்வ மின்னலென.....
இருந்து நின்று எப்போதாவது வந்துசேரும்
விளிப்பு முடிப்பற்ற உன்னிரு மின்வரிகள்.
பரிவு பந்தமெலாஞ் சீவிச்சீவிக் கழித்தபடி தனித்திருக்குமவை
சுமாராய் உன்போலான போதுமென்ன
வரிக்குறளை விரித்து விரித்து வாங்கிய பட்டமுண்டு
வரிக்கு முன்னும் பின்னுமாய்
விட்டிருக்கும் நெடிய இடைவெளிகளை
முன்னம் நீ புழங்கிய சொல்லிட்டே நிரப்புவேன்.
அழகிய கவிதையாயது மேலெழுந்து மேகமாய் மிதக்கும்
சடசடத்துக் கீழிறங்கும்
அலையெழுப்பி அகவும்
கீச்சிட்டபடி ரீங்காரமிடும்
தென்னம்பிஞ்சுகள் சொரித்தவாறே
பூவிதழை அசைத்தசைத்துப் பனியுதிர்க்கும்
பாகாய் பரவிப்பரவி உறைய வைக்கும்
ஆய்ந்து முடித்ததுதான் நியுற்றன் விதியெனில்
ஒரு தென்னைமரமாய்
நெடிந்தோங்கியிருக்குமுன் பெருங் கர்வங்கூட
என்றாவதுடைந்து சிதறத்தானே கூடும்
ஓயாது தட்டுமென் வலிய அன்பின்முன்.sfmali@kinniyans.net