நெல்லள்ளிய காக்கை வாய்கள்

எஸ்.நளீம்


காக்கை வந்து அழைக்கிறது காக்கா... காக்கா...
பசியா - இல்லை
செய்திப் பசி அதுக்கு
இல்லையேல் என்ன அவஸ்த்தை இந்த நேரம்
உடல் ஊறி ஊற்றுக் கதிக்கிறது குளிர்
விடாமல் கொட்டுது வானம்
பகல் பத்து மணி இருளுக்குள் நசிபடும் வெளிர்
இன்றை விளக்கேற்றி விடியவைக்க சேவல் இல்லை
மூட்டை குத்தி முறிந்த பாயில்
இத்தனை தூக்கப்பசை இந்த வயல் காட்டில்.
கண் விழித்தால்
வாடியோரம் மறமறன்னு
மழை குளித்து மகிழ்ந்த புல்லை காந்து தின்னும் பசு
கொத்திக் கொத்திக் காதுக்குள்
இரை தேட
தலையசைத்து மைனா துரத்தும்
எருதுப் பையன் ஆஹா...
நெல்லள்ளிய காக்கை வாயாய்
வரவையெல்லாம் பச்சைப் பயிர்
கொல்லையில்
முழு நிறைவாய் விளைந்து நிற்கும்
இறுங்குப் பெண்ணில் கிளிக் கதைகள்
துரத்த மனம் வருமா
முட்டை ஈந்த மகிழ்வெழுப்பி
கொக்... கொக்... கொக்...பாடும்
கோழித் தாய் அடுக்களையில்
இப்போ
திக்குத் தேடி செய்தி தரும் காக்காய்... காக்காய்...
அனைத்தும் மறந்த என்னுலகம்
இதுதான் இதுதான் என்றாலும்
நீ தேடி வந்து செய்தி சொல்ல ஊரில்
இன்று யார் பிறந்தார் யார் இறந்தார்


naleemart@gmail.com