வசீகர இளமை.

வேதா. இலங்காதிலகம்,ஓகுஸ், டென்மார்க்.

வளமுடை வயலில் பயிராகும் வல்லமை
வாலிபம் வானத்தை வில்லாய் வளைக்கும்.
வாழ்வில் உயர, தாழ்வில் முன்னேற
நீள்வில்லா இளமை கோலென உதவும்.

இயல்பு வாழ்வியல் வழியில் காண்கிறோம்
இளமையில் பேச்செதையும் எடுத்தெறியும் வாலிபம்.
வண்ணமிகு வசீகர இளமை சாதனையை
எண்ணிவிட்டால் திண்ணமாய் விண்தொடும்.

அந்தியில் சந்தி மதகில் வம்பு
சிந்த, குந்துதல் இளமை இன்பம்.
காயப்படும் இளமை மனங்களால் பல
காலித்தன செயற்பாடு வேலிதாண்டும்.

அன்பு ஆதரவு இழந்த இளமை
ஆற்றாமை மேவி, ஆழமாய்ப் புண்பட்டு,
ஆவேசமாவது பெரும் சமூகக் கேடு.
ஆதரவு கொடுத்தல் நல்லோர் கடனே!

பாரிய பொறுப்புடை பூவிரிக்கும் இளமையை
நேரிய நடத்தையால் நிதானமாய்க் காத்திடு!
சீரிய வாழ்வு வீரியமாய்ப் பாய்
விரிக்க மனிதன் சூரியகாந்தியாய் மலரலாம்.


kovaikkavi@gmail.com