ரயிலில் பயணிகள் பலவிதம்!

மதுரை பாபாராஜ்

வாசலில் நிற்காதே! வாசகத்தைப் பார்த்துவிட்டும்
வாசலில் நின்றேதான் பேசிடுவார்-- ஊசலாடும்
அந்தக் கதவைத் திறந்துவைத்து நின்றிருப்பார்!
நெஞ்சம் பதறும் நினைந்து.

அடிக்கடி நண்பர் எழுந்தேதான் செல்வார்!
இடிப்பார்! பரிதாப மாய்ச்சிரித்துக் கொள்வார்!
துடிப்பும் சுறுசுறுப்பும் சொத்தாக சீட்டில்
நொடியும் இருக்கமாட்டார்! பார்.
பக்கத்தில் உள்ளவரோ பேசாமல் வந்திடுவார்!
அக்கறையாய்ப் பேசி அவரையும் பேசவைத்துக்
கச்சேரி செய்து களைகட்ட வைத்திடுவார்!
இத்திறமை யார்தந்தார்? சொல்.

என்னதான் பேசினாலும் ஒன்றிரண்டு வார்த்தைகள்
தன்னால் முடியுமென்று பேசுகின்ற மாந்தரும்
வண்டிப் பயணத்தில் வந்திடுவார்! சொற்களை
எண்ணித்தான் பேசுவோரும் உண்டு!
வருகின்ற பண்டமெல்லாம் நண்பரின் வாய்க்குள்
உருவிழந்து போகும் வயிற்றில் -- அரைப்பதற்கு
அஞ்சமாட்டார்! நாவோ சுவையில் மயங்கிட
உண்பார் தொடர்ந்து ரசித்து.
எந்தெந்த ஊருக்கு எந்தெந்த நேரத்தில்
இந்தவண்டி போகுமென்று சொல்லிக் களித்திருப்பார்!
அந்தந்த ஊரின் பெயரையும் சொல்லிடுவார்!
நண்பரின் சேவையோ நன்று.
அன்றிருந்து இன்றுவரை நிர்வாகக் கோளாறைக்
கண்டபடிப் பேசி அலசிடுவார் --- தண்டவாளச்
சத்தம் இவரது சத்தத்தில் மங்கிவிடும்!
இப்படியும் மாந்தர்கள் உண்டு.spbabaraj@gmail.com