கடலுக்கு அப்பால் பூக்கும் அந்த வெள்ளைமலர்கள்!!

வித்யாசாகர்

ண்ணிரண்டை விற்றுவிட்டு
கண்ணாடியை வாங்குறோம்,
விளக்கை அணைத்துவிட்டு
வெளிச்சத்தை
தேடுறோம்

நாலும் தெரிந்தவர்கள்
தனியாளா நிக்கிறோம்,
சொந்தபந்தம் இல்லாம
செத்த பிணமா
அலையுறோம்

நல்ல நாலு ஏதுமில்லை
நிகழ்ச்சின்னு ஒண்ணுமில்லை
கல்யாண  நாளைக் கூட
தொலைபேசியில்
தீர்க்கிறோம்

இயக்கிவிட்ட எந்திரமா
இரவு பகல் உழைக்கையில
வியர்வையில் சரித்திரத்தை
காய காய
எழுதுறோம்

காற்று போல மண்ணு போல
மனசெல்லாம் ஆசை ஆசை,
ஆசைப் பட்ட அத்தனையையும்
அற்ப பணத்துக்கே
விற்கிறோம்

பணமென்னும் காகிதம் தான்
விதியை கூட மாத்துதே,
வீடுமனை பல இருந்தும்
மனசு ஒத்தையாவே
வாடுதே

சின்ன சின்ன கனவுகளும்
சேர்த்துவைத்த நினைவுகளும்
மனதில் மரணமாவே கனக்குமோ
பெரும் தீயாக
எரிக்குமோ

கல்லறையில் கூட நாளை
வெறும் புல்லாக முளைக்குமோ?
காற்றாட நகர்ந்து நகர்ந்து - நாம்
வாழாததை பேசுமோ...(?)

காட்டாற்று வெள்ளத்தில்
கரையும் புள்ளியாய் போகுமோ,
காலத்தின் நகர்தலில் -
எங்களின் நிறத்தை வெள்ளையாகவே தீட்டுமோ!!!!
vidhyasagar1976@gmail.com