பா.சண்முகம - கவிதைகள்

பா.சண்முகம

பால்யத்தின் பக்கங்கள் !!!!
 
வெற்றிடம் ஒன்றின் இருட்டு மூலையில்
மெல்லிய நூல் ஒன்றின் முனையில் கட்டப்பட்டு
சதுரமாய் வரைந்து
தொங்கிகொண்டிருகிறது வானம்.

நெடு உயரத்தில் பருந்தொன்று
தன் அலகில் இரையைக் கொத்தியபடி
பறந்து செல்கிறது.
மற்றொரு ஓவியத்தில்
குதிரை ஒன்று வேகமாய் ஓட
புழுதியைக் கிளப்பியபடி விரிகிறது சாலை.

பக்கத்தில் அமர்ந்து கிறுக்கிக் கொண்டிருக்கிறாள் 
இரண்டு வயதையொத்த பெண் குழந்தை.
அப்படி ஒன்றும் இல்லை என் ஓவியம்
அவளுடையதைபோல் !
அவளை பால்யமென நினைத்துக் கொண்டிருக்கிறேன்

அந்தவெற்றிட இருட்டில்
என்னை அவள் பால்யமென சுமந்து
திரிந்து  கொண்டிருக்கிறாள்
கையில் தூரிகையோடு !!!
 

பிணங்களின காப்பாளன் !

தற்கொலைகளும் ,விபத்துகளும் சேர்த்து
வைக்கப்பட்டிருகின்றன  அந்த அறையில்.

நேற்று விஷம் குடித்து இறந்த ஒருவனின்
மூக்கின் வழியே ஒழுகும் ரத்தம்
அவன் சட்டை காலரை நனைக்கிறது வியர்வையைபோல,
வெறித்து இருக்கும் அறையெங்கும் பிணங்களின்
வெறுமையான பார்வைகள் தெறித்து இருக்கின்றன.
கசாப்புக் கடைக்காரனைப்போல் இருக்கிறது
அவனது சட்டை மனிதக் குருதி கறை  படிந்து,
புதியதாய் இறந்த பிணங்கள் காத்துக் கொண்டிருகின்றன
அடுத்து அறுபடுவதற்கு,
விபத்தில் இறந்த ஒருவனின் தலையில்
தட்டப்படும் சுத்தியலின் சத்தம்
இன்று வெளியில் கேட்கவில்லை ,
பணி நேரம் முடிந்து கிளம்பிய அவன்
மீத பிணங்களை நாளை அறுப்பதாய்க் கூறுகிறான்
வீட்டிற்கு சென்று தூங்கும் முன் தன் சட்டைப்
பையிலிருந்த மதுப் பாட்டிலைக் குடித்தவன்,
பிணங்களை போல் சுரணை அற்றுக் கிடக்கிறான்
மறுநாள் விடிந்த இரவோடு எஞ்சிய பிணங்களை அறுக்கப்
பிணங்களை தேடி செல்கிறான் ஒருவன் !

நிர்வாணம

அடுத்தவர்களை மறந்து, தன்னை மட்டும் அறிந்த
பைத்தியக்காரன் எனப்படும் ஒருவன்,
நெடுக செல்லும் சாலை ஒன்றில் செல்கிறான் ,
வீசும் காற்றில் அவன் ஆடை விலக ,
நிர்வாணத்தை  மறந்து! தன் கைலியை
மட்டும்  பத்திரபடுத்துகிறான் !
அவ்வழியே அவனை சிரிப்புடன்
கடந்து போகின்றன ,
ஆடையணிந்த அவிழ்க்கப்படாத சில
நிர்வாணங்கள் !!

வியாபாரம்

முதல் வியாபாரம் செய்ய போகும் நாமும்
கடைக்காரனோடு சேர்ந்து வேண்ட வேண்டியதாய்
இருக்கிறது விற்பனை நன்றாய்
ஆகவேண்டுமென !


 

shanmugamb025@gmail.com