என் கிராமத்திற்கு வந்துபோன கடலைவியாபாரி

துவாரகன

நகரச் சந்துகளில் 
கூவிக்கூவி விற்ற 
கடலை வியாபாரி 
ஒருநாள் 
என் சின்னக் கிராமத்திற்கு வந்துபோனான்

மழை பெய்து ஓய்ந்திருந்த 
மாலைப்பொழுதில் 
சிறுவர்கள் மாபிள் அடித்து 
விளையாடிக் கொண்டிருந்தனர்.

பெரியவர்கள் கோவிலில் 
கடவுளைக் கண்டு 
ஆனந்தக் கூத்தாடிக் கொண்டிருந்தனர்.

குழந்தைகளின் மூச்சிலும் 
சிறுவர்களின் பேச்சிலும் 
ஊர் உயிர்த்திருந்தபோது 
ஊரின் ஒதுக்குப் புறத்தால் 
வந்துபோனான் கடலை வியாபாரி

கடவுளைத் தூக்கி 
வீதியுலாச் செல்ல 
இளைஞர்களைத் தேடியபோது 
அவர்கள் 
யாருக்கும் தெரியாமல் 
கடலை கொறித்துக் கொண்டிருந்தனர்

அழகான கிராமத்தின் 
குச்சொழுங்கைகள் எல்லாம் 
அசிங்கமாயின 
பகிர்ந்துண்டவர்களின் எச்சத்தால்

 


kuneswaran@gmail.com