டிசம்பர 11

இ.பா.சிந்தன்

காலையில் எழுந்து
கண்விழித்து பார்த்தேன்!

சுட்டெரிக்கும் சுரியனும்
சுள்ளென்று அடிக்காமல்
மென்மையாய் தொட்டெழுப்பிய
மாற்றத்தைக் கண்டேன்!

வீட்டருகே வீற்றிருக்கும்
விசால குளத்தை
வேடிக்கை பார்க்க சென்றேன்!

தண்ணீரின் அளவைமீறி
தலைதூக்கி எட்டிப்பார்த்து
காற்றலையின் திசைதாண்டி
மெல்லமாய் இதழ்சாய்த்து
மெல்லிய புன்னகையில்
மனதை நிறைத்துவிட்ட
தாமரையின் முகம் பார்த்தேன்!

வீட்டிற்கு திரும்பினால்
வாசலிலே குழாயென்ற பெயருடன்
தண்ணீரைப்பார்த்தறியா
துருப்பிடித்த ஒரு பொருள்!

அருகிலே சென்று
அலட்சியமாய் தொட்டுப்பார்த்தேன்!
குற்றால அருவியாய்
கொட்டியது தண்ணீர்!

நாட்டு நடப்பறிய
நாளிதழை திறந்தேன்!

சண்டையில்லா சமூகம் அமைப்போம்!
ஜார்ஜ் புஷ் பேட்டி!

அம்பானிகள் சொத்துக்கள்
அரசுடைமை ஆக்கம்!

இலவசமாய் கல்வி,
இந்தியா சாதனை!

உலகத்தரம் வாய்ந்த
உள்ளூர் சாலைகள்!
உலக சுகாதார
அமைப்பு பாராட்டு!

ஏனிந்த மாற்றங்கள்?
யோசித்துக்கொண்டிருக்கையில்
பூனை தட்டிவிட்ட
பாத்திரத்தின் அலறல் - என்
கனவை கலைத்தது!

எல்லாமே வெறுங்கனவா ?

கண்களை கசக்கி
கட்டிலை விட்டெழுந்தேன்!

கனவுகளின் காரணம்தான் என்ன?

காலண்டரின் முகத்திரையை
கிழித்தெரிந்து பார்த்தேன்!
சிரித்துக்கொண்டே நிறைவாய் சொன்னது
பாரதியின் பிறந்தநாளென்று!

நல்லோர் பிறந்தநாளில்
நல்லதே நடக்கும்
நாம் காணும் கனவுகூட!chinthanep@gmail.com