ஒரு மூடப்பட்ட தேசம்!

பி.அமல்ராஜ்

அது ஒரு
அனாதைகள் அற்ற மண்.
பதாதைகள் ஏந்தி
பழக்கப்படாத தேசம்.
ஆயுதத்தோடு
போராட பழக்கிக் கொண்டாலும்
மறியல் போராட்டங்கள் இல்லை.
கடவுளை வழிபட்டாலும்
மனிதத்தில் நம்பிக்கை
வைத்திருந்த ஜனங்கள்.
காணிகளை
வேலிகள் கூட
காவல் காத்திருக்கவில்லை.
வேட்கை
வெயிலாய் படர்ந்திருந்தது.
தமிழன் சுயம்
தனித்தே நின்றது.
மனிதர்கள்
மிதிக்கப்படவில்லை.
மரங்கள் கூட மதிக்கப்பட்டன.
ஊழல்கள் இல்லை
தேர்தல்கள் கூட இல்லை
இருந்தும்
மக்கள் ஆட்சியே நடந்தது.
அந்த மண்
இரத்தத்தில்
தோய்க்கப் பட்டிருந்தாலும்
இரக்கம் என்றுமே தூங்கியதில்லை.
பெண்களுக்கும்
அவர்கள்
கற்புக்களிற்கும்
காவல் பற்றி
என்றுமே கவலை இருந்ததில்லை.
விலங்குகள் கூட
பெண்களை முட்ட
பெரும்பயம் கொள்ளும்.
கன்னிப்பெண்கள் - பிறர்
கண்களில் கூட
களங்கம் கொள்ளவில்லை.
தாடி இல்லாமல் கூட
அங்கு
சேகுவேராக்கள் இருந்தார்கள்.

இப்பொழுது,
இந்த தேசம்
மூடப்பட்டிருக்கிறது.
சுதந்திர வேட்கையும்
சுடுகாட்டு வாசமும்
சிந்தப்படாமல் இருக்கட்டும்
என்பதற்காய்!


a_mal22@yahoo.com