காற்றில் ஒலிப்பாய் வாலி..

வித்யாசாகர்



வாலி என்றதுமே வயோதிகம் மறக்கும்
வாலி என்றாலே வாலிபம் வரும்
வாலி என்பதை வரலாறு நினைக்கும்
வாலிக்கு அஞ்சலி என்றதுதான் இன்றைக்கு வலிக்கும் துக்கம்!

ஓடியும் சிறகுகளைப் பாட்டினால் கட்டியவர்
பாட்டோடு மட்டுமே மூச்சையும் விட்டவர்
காற்றின் அசைவிலும் காதினிக்கும் பாடல்களைத் தந்தவர்
பதினைந்தாயிரம் பாடல்களுக்குப் பின்னேகண்களை மூடியவர்;

பாடியத் தெருவெங்கும் பிறர் பெயரை ஏற்றவர்
நாட்டு எல்லையைவிட்டு பாட்டாலே போனவர்
நாட்டாமை செய்யாது பாட்டால் ஆண்டவர்
ஏட்டிலும் எழுத்திலும் இசையாய் கலந்தவர்;

கட்டுமரக் கடலென்றாலும் சரி
கட்டழகு பெண் அசைவென்றாலும் சரி
கற்பத்தில் சுமந்த அன்னைப் பாட்டென்றாலும் சரி
மூன்றுத் தலைமுறைக்குப்பின்னும் மூப்பின்றி எழுதியவர்;

இவருக்கு நரைக் கூடினப் பின்னும் வரி கூடின
பல் கொட்டியப் பின்னரும் சொல் கொட்டின
கால் தடுமாறினாலும் கவியரங்கம் தாங்கின; பாண்டவர்பூமியும்
கிருஷ்ணவிஜயமும் இவரால் கவிதையில் ஆயின;

கேள்வி கேட்க பாட்டில் சொன்னவர்
எதிர்நீச்சலைப் போட என்றோ எழுதியவர்
காற்று வாங்கப் போய் கவிதை வாங்கிவந்தவர்
கல்லைமட்டும் கண்டார் கடவுளைக் காணவில்லை
யென்றுப்

பாட்டால் அழுதவர்;
இனி கேட்டாலும் கிடைக்கார்
புதுப் பாட்டிற்கு ஏற்கார்
எமன் வீட்டிற்கே இனி விழிப்பார்..

என்றாலும் -
மரணமவரின் உயிரையே யெடுக்கும்
மண் அவரின் உடம்பையே யரிக்கும்
மக்களவர் பெயரை மறப்பினும்
காலம் அவரை பாட்டாக முனுமுனுக்கும்..

 

vidhyasagar1976@gmail.com