மழையெச்ச நாளொன்றில்...

முனைவென்றி நா. சுரேஷ்குமார்வெயிலில் 
தலையுலர்த்திக்
கொண்டிருந்தது 
நேற்றுபெய்த
மழையில் 
தொப்பலாய்
நனைந்த 
அந்தக்
குடிசை.

பெய்த மழையாய் 
கூரைவழி
எட்டிப்பார்த்தது 
மேகத்தின்
கண்ணீர் 
ஏழைகளின்
வாழ்க்கையை...

மெதுமெதுவாய் 
மேகப்போர்வையை
விலக்கி 
சோம்பல்முறித்தெழுந்தான்
 
தன்
சுட்டெரிக்கும் 
ஒளிக்கதிர்
பற்கள் காட்டி...

குடிசைக்குள் 
மழைநீர்
குளமாய்...
மிதக்கும்
பாத்திரங்கள்...

கைகால்கள் நடுநடுங்க
சோர்வாய்
திண்ணையில் 
குழந்தைகள்
.

கடலோடு வலைவீசி 
கயல்தேடி
கரைதிரும்பாக் 
கணவன்
.

கால்கடுக்க
வாசலில்
நின்றவாறு 
தெருமுனையை
வெறிக்கப்பார்க்கும்
அவள்
 

புயலின் கூரிய நகங்கள் 
பிய்த்து
எறிந்திருந்தன
குடிசைகளின்
கூரைகளை...

ஆறுதல் சொல்வதற்காய்
பறக்கும்
ஹெலிகாப்டரும்...
பார்வையிடும்
கண்களும்...
அடுத்தநாள்
தலைப்பு செய்திக்காக... 

அண்ணார்ந்து பார்த்து 
வேதனை
மறந்து
கைதட்டும்
சிறுவர்சிறுமியர்

கரையொதுங்கியே கிடக்கிறது  
மீனவன்
வாழ்க்கை.

மழைநின்றதாய் 
பெருமூச்சு
விடும்போது 
கூரைவழி
கொட்டத்துவங்குகிறது 
புயலோடு
பெருமழை...

 

munaivendri.naa.sureshkumar@gmail.com