காலாவதியான பாசங்கள்

வி. சந்திராதேவி, நமுனுகுல, இலங்கை
 

குழந்தையாய் பேசி
குதுகலப்படுத்தினாய் அன்று...
இன்று வளர்ந்துவிட்டதாலா
மனதை வதைக்கிறாய்?

இந்த கொடும் வார்த்தைகளை
உனக்கு யார் கற்றுத் தந்தது?
உன்னோடு கைகோர்த்து
வஞ்சக எண்ணத்தை
சுவாசிக்கும் உன் நண்பர்களா?

அவர்கள் அன்போடு
உனக்கு ஊட்டுவது
அமுதம் அல்ல..
அதை நீ உணருவாய் மெல்ல!
 
இப்போதுகளில் ஆணவம் உன்னில்
ஆகோரத் தாண்டவம்
எடுத்துக்கொண்டிருப்பதால்
உண்மையான பாசத்தை
உன் மனம் ஏற்காது!

முட்கள் நிறைந்த பாதைகளில்
வந்தவனுக்குத் தெரியும்
முட்களின் கீறல்களும்
அதன் வேதனைகளும்!

ஆணவம் எனும் தாகத்தில்
உள்ள நீ
கானல் நீர் பொய் என்றால்
நம்பவா போகிறாய்?

தேன் சுவையை அறிந்தவனுக்கு
தேனைப் பற்றிய விளக்கம் தேவையில்லை..
கலப்படம் செய்யப்பட்ட
தேனை சுவைத்துவிட்டு
நீ கசக்குது என்கிறாய்...

காலாவதியானாலும்
இனிப்பின் தன்மை
மாறாததால்
இனிப்புகளை தின்றுவிட்டு
நன்றாயிருப்பதாய் எண்ணுகிறாய்!

காலங்கள் கடக்கும்போது
அதன் விளைவுகள்
உன்னை மனநோவுக்கு உட்படுத்தும்!

அன்று...
நிச்சயமாக உனக்கு
ஆறுதல், அன்பு, நேசம் என்ற
மருந்தே கிடைக்கப்போவதில்லை
ஏன் என்றால
உண்மைகளை உதாசீப்படுத்திவிட்டு
நீ நல்லது என்று எண்ணியிருக்கும்
அனைத்தும் காலாவதியாகிவிடும்..
ஆமாம் நிச்சயமாகவே காலாவதியாகிவிடும்!!!