என் முகமாய் நானிருப்பேன்

பாவலர் கருமலைத்தமிழாழன்

என்முகத்தை நானேயேன் மாற்ற வேண்டும்
     எல்லோர்க்கும் ஏற்றபடி மாறு யென்றே
என்னிடத்தில் ஏன்இவர்கள் சொல்ல வேண்டும்
     எதற்காக சமரசம்நான் செய்ய வேண்டும்
என்சுயத்தை யாருக்காய் இழக்க வேண்டும்
    என்வழியை யாருக்காய் மாற்ற வேண்டும்
என்கொள்கை என்குறிக்கோள் அடைவ தற்கே
     எவர்தடையாய் நின்றாலும் தகர்த்த ழிப்பேன் !

ஊருடனே ஒத்துப்போ என்று ரைப்பார்
     ஊர்செய்யும் தவறுகளுக் கிசைவ தோநான்
சேறுதனைச் சந்தனந்தான் பூசி டென்றே
    செப்பிடுவோர் கூற்றுதனை ஏற்ப தோநான்
நாருதனில் மலர்கோர்த்த லின்றிச் சுற்றி
   நறுங்கழுத்தை இறுக்குவோரைப் போற்ற வோநான்
ஏறுபோல தீமைகளை எதிர்த்தி டாமல்
    எச்சில்நாய் போலிருக்க முடியா தென்னால் !

குற்றத்தைக் குற்றமெனச் சொல்ல அஞ்சிக்
     குற்றேவல் புரிவதற்கா வாழ்வைப் பெற்றேன்
வெற்றுக்கே வாழ்வதினால் பயன்தான் என்னே
    வெறும்வயிற்றை நிரப்புதற்கா இந்த வாழ்வு
சிற்றெறும்பும் கடித்தபின்பே உயிர்து றக்கும்
     சிறுபுலியும் சினந்தெழுந்தால் யானை ஓடும்
பெற்றயென்றன் தமிழைநாட்டை உயர்த்தும் போரில்
     பெறுகின்ற விழுப்புண்ணே என்னைக் காட்டும் !