நிழலுக்கு முன் நீ (காதல் கவிதை)

வித்யாசாகர்


சிரித்தத
சண்டையிட்டது
சைகை செய்தது
மறைந்துப் பார்த்து காற்றுவெளியில்
முத்தமிட்டது

எல்லாவற்றையும்
நினைவில் வைத்திருக்கிறாயா?

எனக்காக நீ முகத்தில்
அப்பிக்கொண்டுவரும் அந்த பவுடர்கூட
எனக்கு மறக்கவில்லை..,

இரும்பு கதவின்
மூடும் சத்தம்,
நீ வந்துநிற்கும்
குழாயடிப் பேச்சு

ஓடிவந்து நீ
எனைப்பார்த்ததும் சட்டென நின்றுவிட -
வானிலும்
மனதுள்ளும் பறந்த அந்த புழுதிவாசம்

படித்துவிட்டு
கவிதை
நல்லாருக்கென்றுச் சொன்ன
வார்த்தையும்'
கண்களில் வேறெதையோ பேசிய
பொழுதையுமென

எதையும் என்னால்
மறக்கமுடியவில்லை..

எல்லாமே
கண்ணின் இமையைப்போல
துடிக்கும் இதயம் போல
விட்டிடாத உயிரைப்போலவே
பத்திரமாக இருக்கிறது என்னிடம்..