மறப்பதில்லை மாறுவதற்கு.. (காதல் கவிதை)

வித்யாசாகர்


ழ்க்கையின் அத்தனை
அவசர ஓட்டத்திற்கு நடுவேயும் நான்
உன்னையும் நினைத்துக்கொண்டே ஓடுவதை
யாரறிவார்..?

உன் பிறந்ததினம்

நீ முதலில் பேசிய நாள்

அதிர்ந்துப் பார்த்தப் பார்வை

தெருமுனை

உன் எதிர்வீட்டு சன்னல்

நீ எதிரே நிற்குமந்த
மொட்டைமாடி

கடைசியாய்
விளக்கமர்த்த வருமந்தப்
பின்னிரவு

பிடிக்காவிட்டாலும்
தெருவில் நிற்க வாங்கும் ஏதேதோ

எனக்காக சுமந்த உன்
கனவு

நீ அழுத வலி

காத்திருந்த நாட்கள்

பெற்றிடாத நம் முத்தம்

எல்லாம் எல்லாம் எல்லாம்
என்னோடிருக்கிறது..

நினைவு முழுதும்
நீ இருக்கிறாய்

இன்னும் நூறுவருடம்
கழித்துக்கூட வந்து கேள்
ஒரு சொட்டுக் கண்ணீருக்குள்
பத்திரமாய் வைத்திருப்பேன் உன்னை!